வேலைவாய்ப்பு முகாமில் 1,168 பேருக்கு பணி நியமன ஆணை


வேலைவாய்ப்பு முகாமில் 1,168 பேருக்கு பணி நியமன ஆணை
x
தினத்தந்தி 6 May 2018 4:15 AM IST (Updated: 6 May 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 1,168 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் கிராம தன்னிறைவு திட்டம் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நேற்று விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்துகொண்டனர். இதில் 61 தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைக்கு ஆட்களை தேர்ந்தெடுத்தனர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு முதல் பொறியியல் படிப்பு வரை படித்த ஆண், பெண் ஆகிய இருபாலரும் அவரவர் தகுதிக்கேற்ப தேர்வு செய்யப்பட்டனர்.

முகாமில் மொத்தம் 3,343 பேர் பங்கேற்றதில் 1,168 பேர் பல்வேறு நிறுவனங்களில் வேலைக்காக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கி பாராட்டினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து இளைஞர்களுக்காக பல்வேறு திட்டங்களையும், வேலைவாய்ப்பு முகாம்களையும் ஏற்பாடு செய்து செயல்படுத்தி வருகிறது. எனவே இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாம்களை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் அரசு போட்டித்தேர்வுகளிலும் இளைஞர்கள் கலந்துகொண்டு அரசு வேலைவாய்ப்பையும் பெற வேண்டும் என்றார்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 36 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் உதவியாக ரூ.50 லட்சத்து 40 ஆயிரத்தையும், இந்தியன் வங்கி சார்பில் சிறந்த தொழில் முனைவோர்களுக்கான சான்றிதழ்கள், விருதுகளையும் கலெக்டர் வழங்கினார். இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மகளிர் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன், தாசில்தார் சுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story