பொள்ளாச்சி அருகே கார் மீது மோதி தனியார் பஸ் வீட்டுக்குள் புகுந்தது, 5 பேர் படுகாயம்


பொள்ளாச்சி அருகே கார் மீது மோதி தனியார் பஸ் வீட்டுக்குள் புகுந்தது, 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 5 May 2018 10:45 PM GMT (Updated: 5 May 2018 7:02 PM GMT)

பொள்ளாச்சி அருகே கார் மீது தனியார் பஸ் மோதி வீட்டுக்குள் புகுந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே சேத்துமடையில் இருந்து தனியார் பஸ் ஒன்று நேற்று மதியம் 12.30 மணிக்கு பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டது. பஸ்சை வேட்டைக்காரன்புதூரை சேர்ந்த டிரைவர் பகவதிராஜ் (வயது 35) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த கருணாகரன் (30) என்பவர் இருந்தார். பஸ்சில் 25 பயணிகள் இருந்தனர்.

சீனிவாசபுரம் ரெயில்வே கீழ்மட்ட மேம்பாலம் தாண்டி பொள்ளாச்சி நோக்கி பஸ் வந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் முன்னால் சென்ற காரை டிரைவர் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வாகனம் வந்ததால் பஸ்சை இடதுபுறமாக டிரைவர் திருப்பினார். இதில் முன்னால் சென்று கொண்டிருந்த காரின் பக்கவாட்டில் பஸ் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோட்டோரத்தில் இருந்த பாழடைந்த வீட்டுக்குள் புகுந்தது.

பஸ் விபத்துக்குள்ளானதும் டிரைவர், கண்டக்டர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதில் சீலக்காம்பட்டியை சேர்ந்த உமா (31), கோவை மீனாட்சி கார்டன் பகுதியை சேர்ந்த சாந்தி (50), அவரது மகள் நிவேதா பிரியா (23), ஆனைமலை அருகே உள்ள பொன்னாலம்மன் துறையை சேர்ந்த ராஜேஸ் (வயது 40), அவரது மனைவி பார்வதி (38) ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் உமா பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். நல்லவேளையாக பஸ் முன்னால் சென்ற கார் மீது மோதி இருந்தால் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டு இருக்கும். காரில் இருந்த பெரியபோதுவை சேர்ந்த சீனிவாசன் என்பவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதற்கிடையில் பஸ் டிரைவர், கண்டக்டர் இருவரும் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து குறித்து பஸ்சில் இருந்த பயணிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி மீன்கரை ரோடு இருவழிசாலையாகும். இந்த சாலையில் தனியார் பஸ்கள் அதிவேகமாக இயக்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு இதே தனியார் பஸ் மேம்பாலத்தில் மோதி பள்ளி மாணவி ஒருவர் பரிதாபமாக இறந்தார். இந்த பஸ் சேத்துமடையில் இருந்து புறப்பட்ட நேரத்தில் இருந்து வேகமாக வந்தது. இதனால் உயிரை கையில் பிடித்து கொண்டு உட்கார்ந்து இருந்தோம். சீனிவாசபுரம் ரெயில்வே கீழ்மட்ட மேம்பாலம் வளைவானது. அந்த பாலத்திலும் டிரைவர் வேகத்தை குறைக்க வில்லை.

பஸ் விபத்துக்குள்ளான பகுதி எப்போதும் பஸ்சுக்காக 10-க்கும் மேற்பட்டவர்கள் காத்து இருப்பார்கள். ஆனால் விபத்து ஏற்பட்ட நேரத்தில் அங்கு யாரும் இல்லை. அதிகாரிகள் ஏதாவது விபத்து ஏற்படும் போது மட்டும் பெயரளவிற்கு பஸ்களின் வேகத்தை கண்காணிக்கின்றனர். அதன்பிறகு அவற்றை கண்டுகொள்வதில்லை.எனவே அதிகாரிகள் மீன்கரை ரோட்டில் அதிவேகமாக இயக்கப்படும் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தினசரி அங்கு ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும். விபத்தை ஏற்படுத்தும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் மற்றும் பஸ்களின் வழித்தட உரிமத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story