கடலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்யும் பணி
கடலூர் சின்னவாணியர் தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
கடலூர்
திருப்பாதிரிப்புலியூர் பிள்ளையார்கோவில் சந்திப்பில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சன்னதி தெரு மற்றும் போடிச்செட்டித்தெரு வழியாக லாரன்ஸ் ரோட்டுக்கு வருபவர்கள் சின்னவாணியர் தெருவை பயன்படுத்துகிறார்கள். இதனால் அந்த தெருவில் எப்போதும் வாகன போக்குவரத்து காணப்படுகிறது. ஆனால் அந்த தெருவின் இருபுறங்களையும் கடைக்காரர்கள் ஆக்கிரமித்து உள்ளதால் 23 அடி அகலமுள்ள சின்னவாணியர் தெரு, தற்போது 12 அடியாக குறுகிப்போய் விட்டது.
எனவே சின்னவாணியர் தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் சின்னவாணியர் தெருவை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு வருவாய்த்துறையினருக்கு சப்-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டார். அதன்படி வருவாய் ஆய்வாளர் சிவா தலைமையில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் நில அளவையர் ஆகியோர் நேற்று காலை சின்னவாணியர் தெருவுக்கு வந்து ஆக்கிரமிப்பு பகுதியை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் 8 கடைகள் ரோட்டு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதுபோல 10-க்கும் மேற்பட்ட கடைகளின் மேற்கூரைகள் ரோட்டை ஆக்கிரமித்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடைக்காரர்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீசு வழங்கப்படும். நோட்டீசு வழங்கப்பட்டதில் இருந்து 10 நாட்களுக்குள் கடைக்காரர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அவை இடித்து அகற்றப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேப்போல் மஞ்சக்குப்பம் மீன்மார்க்கெட் அமைந்துள்ள சுதர்சன் தெருவையும் கடைக்காரர்கள் ஆக்கிரமித்து மேற்கூரை அமைத்து உள்ளனர். குறிப்பாக மீன்மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் தான் ஆக்கிரமிப்புகள் அதிகமாக காணப்படுகிறது. எனவே அந்த தெருவையும் அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சப்-கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story