மாவட்ட செய்திகள்

கண்மாயில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்கள் பலி + "||" + In kanma Drowned Three boys including brother and brother were killed

கண்மாயில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்கள் பலி

கண்மாயில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்கள் பலி
தேனி அருகே கண்மாயில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
அல்லிநகரம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள எழுவனம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாசன். அவருடைய மகன்கள் கோபிநாதன் (வயது 12), மிதுன் (10). திருப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் கோபிநாதன் 7-ம் வகுப்பும், மிதுன் 5-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் இருவரும் தேனி அருகே வடபுதுப்பட்டி அம்மாபுரத்தில் உள்ள தனது பாட்டி ஜெயலட்சுமியின் (50) வீட்டுக்கு வந்துள்ளனர்.

அதேபோல் தேனி அரண்மனை புதூரை சேர்ந்த பிச்சைமணி மகன் ஜீவா என்ற ஜீவானந்தம் (வயது 11). இவனும், அம்மாபுரத்தில் உள்ள தனது பாட்டி பொன்னுத்தாய் வீட்டில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் கோபிநாதன், மிதுன், ஜீவா ஆகிய 3 பேரும், அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலருடன் வடவீரநாயக்கன்பட்டியில் உள்ள முதலியார் கண்மாய்க்கு குளிக்க சென்றுள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கண்மாயில் தண்ணீர் அதிகளவு இருந்தது. அப்போது கோபிநாதன், மிதுன், ஜீவா ஆகியோர் கண்மாயின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீரில் தத்தளித்தபடி அவர்கள் கூச்சல் போட்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் விளையாடுவதாக கூறி சக சிறுவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

சிறிது நேரத்தில் 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற சிறுவர்கள் அங்கு துணி துவைத்துக்கொண்டிருந்தவர்களிடம் தெரிவித்தனர். உடனே அவர்கள் கண்மாய்க்குள் மூழ்கிய 3 சிறுவர்களையும் மீட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்ததும் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

பின்னர் 3 சிறுவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து வந்த அல்லிநகரம் போலீசார், நீரில் மூழ்கி இறந்த அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்து அங்கு விரைந்து வந்த பெற்றோர், உறவினர்கள் சிறுவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண்மாயில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்கள் இறந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.