குழாய் உடைப்பால் குடிநீர் வினியோகம் பாதிப்பு


குழாய் உடைப்பால் குடிநீர் வினியோகம் பாதிப்பு
x
தினத்தந்தி 5 May 2018 10:45 PM GMT (Updated: 5 May 2018 7:52 PM GMT)

ஆங்கூர்பாளையம் ஊராட்சியில் குழாய் உடைப்பால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீரை தேடி பொதுமக்கள் அலைந்து வருகின்றனர்.

கம்பம்

கம்பம் அருகே உள்ள ஆங்கூர்பாளையம் ஊராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசித்து வரும் மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இவர்களுக்கு லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் கொண்டுவரப்பட்டு தபால் நிலையத்தில் உள்ள மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது கோடைகாலம் என்பதால் வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம், ஆங்கூர்பாளையம் ஊராட்சிக்கு தண்ணீர் வரக்கூடிய குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது.

இதுதவிர மின்விளக்கு, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக ஆங்கூர்பாளையத்தை பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். கடந்த குடியரசு தினவிழா அன்று நடந்த கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தனர். பின்னர் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இருப்பினும் குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

மேலும் தள்ளுவண்டியில் குடங்களை வைத்து கொண்டு தண்ணீரை தேடி அலைய வேண்டி இருப்பதாக பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் ‘ஆங்கூர்பாளையம் ஊராட்சிக்கு லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து வரும் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குழாய் உடைப்பை சரிசெய்யக்கோரி ஊராட்சி அலுவலத்தில் புகார் கொடுக்கலாம் என்றால் 4 மாதங்களாக அலுவலகம் திறக்கப்படவில்லை.

இதனால் குழாய் உடைந்து வெளியேறும் கசிவு தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வருகிறோம். இல்லையெனில் பக்கத்து கிராமங்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரிசெய்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story