வாலாந்தரவை ஊராட்சியில் கருத்து கேட்பு கூட்டம்: கெயில் நிறுவனம் குழாய் அமைக்கும் பணிக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு


வாலாந்தரவை ஊராட்சியில் கருத்து கேட்பு கூட்டம்: கெயில் நிறுவனம் குழாய் அமைக்கும் பணிக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 5 May 2018 11:00 PM GMT (Updated: 5 May 2018 7:55 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ஊராட்சியில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கெயில் நிறுவனம் குழாய் அமைக்கும் பணிக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர அந்த பகுதியில் எரிவாயு சேமிப்பு கிடங்கும் அமைந்துள்ளது.

இந்த நிலையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மூலம் ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு நிலத்தடியில் குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுஉள்ளது. இதற்கு வழுதூர், வாலாந்தரவை, தெற்குக்காட்டூர், உடைச்சியார்வலசை, அம்மன்கோவில், தெற்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே இப்பகுதியில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையங்களால் பயங்கர இரைச்சல் சத்தத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் மாசு பாதிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு போன்றவையும் தங்களை அச்சுறுத்தி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தற்போது நிலத்திற்கடியில் எரிவாயுவை குழாய்கள் மூலம் கொண்டு செல்ல உள்ளதாகவும், இதற்காக வாலாந்தரவை, தெற்குக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் கம்ப்ரசிங் நிலையம் எனப்படும் எரிவாயு உயர்அழுத்த நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும் அறிந்த அப்பகுதி மக்கள் இதனை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டனர்.

மேலும் இதுதொடர்பாக கடந்த ஜனவரி மாதம் சாயல்குடியில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்திலும் இப்பகுதி மக்கள் கலந்து கொண்டு தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்ததை தொடர்ந்து அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இப்பகுதியில் இயங்கி வரும் தனியார் மின் உற்பத்தி நிலையத்துக்கு எரிவாயு வினியோகம் செய்ய கெயில் இந்தியா நிறுவனம் குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கி உள்ளது. இதற்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டன. அதனை தொடர்ந்து நேற்று மக்கள் கருத்து கேட்பு கூட்டம் வாலாந்தரவை சமுதாய கூடத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. சுமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தாசில்தார் சிவகுமார், மண்டல துணை தாசில்தார் சரவணன், கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கெயில் இந்தியா நிறுவன பொது மேலாளர் ஆறுமுகம், உதவி பொது மேலாளர்கள் அருணாசலம், ராஜ், நிர்வாக மேலாளர் ஜெகநாதன் உள்ளிட்டோர் திட்டம் குறித்தும், இதனால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் விளக்கம் அளித்தனர்.

இதில் கலந்துகொண்ட வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட வாலாந்தரவை, தெற்குக்காட்டூர், வழுதூர், உடைச்சியார்வலசை, தெற்குவாணி வீதி, தெற்கூர், கீரிப்பூர்வலசை, மருதுபாண்டியர் நகர், படவெட்டி வலசை, ஏந்தல், அளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், முன்னாள் யூனியன் தலைவர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், கிராம தலைவர்கள், வக்கீல்கள், இளைஞர் மன்றத்தினர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் அதிகாரிகளின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துவிட்டனர்.

மேலும் தற்போது நடைபெறும் பணிகளை மட்டும் மேற்கொள்ளவும், புதிதாக இந்த கிராம பகுதிகளில் பணிகளை தொடங்கக்கூடாது என்றும், அவ்வாறு தொடங்கினால் இப்பகுதி மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும் எனவும், ஒருபோதும் புதிய பணிகள் தொடங்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறிவிட்டு கூட்டத்தில் இருந்து வெளியேறி கலைந்துசென்றனர்.

Next Story