தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை வலுபடுத்தும் விதமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்த உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் போலீசார் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி கொடுத்து இருந்தனர். இதனால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் காலை 8 மணி முதல் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக அமைச்சர்களை அழைத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழலை சீரமைக்க பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என்பதால் அதற்காக வேதாந்தா நிறுவன சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இந்த உண்ணாவிரதத்தில் அ.குமரெட்டியபுரம், மடத்தூர், பண்டாரம்பட்டி, பாத்திமா நகர், சில்வர்புரம் உள்ளிட்ட பல பகுதியை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன் மற்றும் பலர் பேசினார்கள்.
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி (வடபாகம்), கார்த்திகேயன் (மத்தியபாகம்) மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story