காவிரி பிரச்சினைக்கு மோடி தீர்வு காணுவார் ஓசூரில் எச்.ராஜா பேட்டி


காவிரி பிரச்சினைக்கு மோடி தீர்வு காணுவார் ஓசூரில் எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 5 May 2018 11:00 PM GMT (Updated: 5 May 2018 9:12 PM GMT)

காவிரி பிரச்சினைக்கு மோடி தீர்வு காணுவார் என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

ஓசூர்,

நீட் தேர்விற்கு முன் நாமக்கல் மாவட்டத்தில், 4 முதல் 5 லட்சம் செலுத்தி பிளஸ்- 2 படித்தனர். நீட்டிற்கு முன் மருத்துவ படிப்பிற்கு சென்ற, 9,087 பேரில், 75 சதவீதம் பேர் நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்றவர்கள் தான். நீட் தேர்விற்கு பின், பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி போன்ற மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சீட் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு, 84 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதினர்.

இந்த ஆண்டு, 25 சதவீதம் அதிகமாக எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு, தமிழகத்தில் பத்து மையங்கள் அமைக்கப்பட்டது. ஆனால், ஒரு லட்சத்து, 11 ஆயிரத்து, 500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனால் கேரளாவில், 1,200, ஆந்திராவில், 200, கர்நாடகாவில், 100 மாணவர்களுக்கு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் மையம் ஒதுக்கவில்லை.

1,500 மாணவர்கள் மட்டுமே வெளிமாநிலத்தில் தேர்வு எழுதுகின்றனர். அவர்களுக்கு அருகில் உள்ள அண்டை மாநிலங்களில் தான் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் அல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அனுபவம் மிக்கவர் போல் பேசவில்லை.

தமிழகத்தை பாலைவனமாக மாறியதற்கு தி.மு.க. தான் காரணம். எஸ்.வி.,சேகரை கைது செய்ய வேண்டியதில்லை. வழக்குப்பதிவு செய்யலாம் அவ்வளவு தான். ஆண்டாளை பற்றி பேசியவரை ஏன் கைது செய்யவில்லை. காவிரி பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வு காணுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தேன்கனிக்கோட்டையில் நேற்று நடந்த பா.ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா ஓசூர் வழியாக சென்றார். வழியில், ஓசூர் எம்.ஜி.ரோடில் உள்ள காந்தி சிலையருகே அவருக்கு மாவட்ட தலைவர் முனிராஜூ, கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் கட்சியினர் மாலைகள் மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜி, மாவட்ட துணைத்தலைவர் போத்திராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் சிவப்பிரகாசம், நகர பொதுச்செயலாளர்கள் கிரிஷ், தங்கராஜ் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து எச்.ராஜா தேன்கனிக்கோட்டை நோக்கி சென்றார். 

Next Story