புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 6 May 2018 4:30 AM IST (Updated: 6 May 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்,

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றி அது குறித்து முறையான அறிவிப்பு வெளியிடாமல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருந்தால் அதனை மூட வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் கரூர் மாவட்டத்தில் 22 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் மதுபிரியர்கள் திறந்திருக்கும் டாஸ்மாக் கடைகளை தேடிப்பிடித்து மதுபாட்டில்களை வாங்கி சென்றதை காண முடிந்தது. இந்த நிலையில் கரூர் வெண்ணைமலையை அடுத்த கே.குப்புச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதையொட்டி இரவோடு இரவாக மது பாட்டில்கள் அங்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டன. டாஸ்மாக் கடைக்கான விளம்பர பதாகையும் அங்கு வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மதியம் அந்த டாஸ்மாக் கடையை திறந்து மது விற்பனை நடந்ததாக கூறி, அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து திடீரென அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் பள்ளி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த கடையை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த வெங்கமேடு போலீசார், டாஸ்மாக் அதிகாரிகள் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை இங்கிருந்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள மதுபாட்டில்களையும் விரைவில் கொண்டு சென்று விடுவோம் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story