வாடிப்பட்டியில் டிரைவரை தாக்கி கொள்ளை: 2 பேர் கைது


வாடிப்பட்டியில் டிரைவரை தாக்கி கொள்ளை:  2 பேர் கைது
x
தினத்தந்தி 5 May 2018 10:45 PM GMT (Updated: 5 May 2018 9:57 PM GMT)

வாடிப்பட்டியில் லாரி டிரைவரை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட திண்டுக்கல்லை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல், 

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அய்யம்பட்டியில் கடந்த 2006-ம் ஆண்டு, ஒரு கும்பல் லாரியை வழிமறித்தது. பின்னர் டிரைவரை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியை சேர்ந்த மாரிமுத்து, நடராஜன், பொன்னகரம் இளையராஜா, கண்ணன், குமார், மாரியப்பன், மதுரை திருப்பரங்குன்றம் செந்தில், சிவன், ஈஸ்வரி ஆகிய 9 பேர் மீது வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த கொள்ளை வழக்கு மதுரை செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 9 பேரும் வழக்கு விசாரணையின் போது ஆஜராகாமல் தலைமறைவாகினர். எனவே, கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. எனினும், போலீசாரிடம் சிக்காமல் 9 பேரும் தப்பிவிட்டனர். இதைத்தொடர்ந்து 9 பேரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

மேலும் அதுதொடர்பாக திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அறிவிப்பு நோட்டீசு ஒட்டப்பட்டது. இதற்கிடையே வழக் கில் தொடர்புடைய 6 பேர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால், திண்டுக்கல் போலீசாரின் உதவியை வாடிப்பட்டி போலீசார் நாடினர். இதையடுத்து இருமாவட்ட போலீசாரும் 6 பேரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் மாரிமுத்து நத்தத்தில் பூண்டு வியாபாரம் செய்வதும், மாரியப்பன் பொள்ளாச்சியில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வருவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த 2 பேரையும் திண்டுக்கல் திட்டமிட்ட குற்றதடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்து வாடிப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Next Story