மாவட்ட செய்திகள்

தடுப்பணையில் மூழ்கி மாணவர்கள் 2 பேர் சாவு + "||" + Two students died at drowned in dam

தடுப்பணையில் மூழ்கி மாணவர்கள் 2 பேர் சாவு

தடுப்பணையில் மூழ்கி மாணவர்கள் 2 பேர் சாவு
வாணியம்பாடி அருகே புல்லூர் தடுப்பணையில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

வாணியம்பாடி,

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நியுடவுன் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் ஆசிரியை. இவர்களது மகன் சரண் (வயது 16). காதர்பேட்டை ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராம்ஜி. தோல் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் அசிதோஷ் (16). சரணும், அசிதோஷூம் தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தனர்.

இந்த நிலையில் சரண், அசிதோஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் தினேஷ், சாய்கணேஷ் ஆகிய 4 பேரும் நேற்று வாணியம்பாடியை அடுத்த தமிழக – ஆந்திர எல்லை பகுதியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புல்லூர் தடுப்பணையில் குளிக்க சென்றனர். குளித்துக் கொண்டிருந்த போது சரண், அசிதோஷ் ஆகிய 2 பேரும் திடீரென பள்ளத்தில் சிக்கிகொண்டு தண்ணீரில் மூழ்கினர்.

இதனையடுத்து உடன் சென்ற நண்பர்கள் 2 பேரும் அய்யா... அம்மா... என்று கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

இதுகுறித்து ஆந்திர மாநிலம், குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசாரும், பொதுமக்களும் மாணவர்களின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை 6.30 மணி அளவில் 2 பேரின் உடலை பிணமாக மீட்டனர்.

இதுதொடர்பாக குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.