குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என கருதி வடமாநில பெண்ணுக்கு அடி, உதை


குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என கருதி வடமாநில பெண்ணுக்கு அடி, உதை
x
தினத்தந்தி 5 May 2018 10:31 PM GMT (Updated: 5 May 2018 10:31 PM GMT)

குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என கருதி வடமாநில பெண்ணை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். மேலும் இரு சம்பவங்களில் 6 வடமாநில வாலிபர்கள் தாக்கப்பட்டனர்.

அடுக்கம்பாறை,

வேலூர் பாகாயத்தை அடுத்த இடையன்சாத்து பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க வடமாநில பெண் ஒருவர் சுற்றித்திரிந்தார். அப்போது அந்த பெண், விளையாடிக்கொண்டிருந்த ஒரு குழந்தையை தூக்கியதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்று கூடி அந்த பெண்ணை பிடித்து விசாரணை செய்தனர்.

அவர் சரியாக பதில் அளிக்காததால் அப்பெண் குழந்தை கடத்தும் பெண் என்று நினைத்து மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அந்த பெண் யார்? என்பது குறித்தும், அவர் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவரா? என்பது குறித்தும் பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் பகுதியில் ஒப்பந்ததாரர் ஒருவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை வடமாநில இளைஞர்களை கொண்டு செய்து வருகிறார். நேற்று இந்த இளைஞர்கள் 5 பேர் கழிப்பிடம் செல்வதற்காக ஓட்டேரி அருகே உள்ள பள்ளஇடையம்பட்டி ஏரிக்கரைக்கு சென்றனர். அவர்கள் குழந்தை கடத்தும் வடமாநில இளைஞர்கள் என்று கருதிய அப்பகுதி பொதுமக்கள் வாலிபர்களை பிடித்து வைத்து தாக்கினர். இந்த சம்பவம் குறித்த தகவல் மேட்டுஇடையம்பட்டி, வாணியங்குளம் பகுதி பொதுமக்களுக்கு பரவியதால் அவர்களும் அங்கு சென்று வாலிபர்களை தாக்கினர்.

இது குறித்து தகவல் அறிந்த அந்த ஒப்பந்ததாரர் சம்பவ இடத்திற்கு சென்று இந்த இளைஞர்கள் தன்னிடம் தான் பணிபுரிவதாக அவர் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் அவர்களை விடுவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோன்று வேலூர் கஸ்பா பகுதியில் சுற்றத்திரிந்த 25 வயதுடைய வடமாநில வாலிபர் ஒருவரை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என கருதி அப்பகுதி பொதுமக்கள் நேற்று அவரை அடித்து உதைத்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த தெற்கு போலீசார் அந்த வாலிபரை மீட்டு ஆட்டோவில் ஏற்றினர். அப்போதும், பொதுமக்கள் அந்த வாலிபரை தாக்கினர். இதுகுறித்து தெற்கு போலீசார் அந்த வாலிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story