வணிக நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு தகவல் பலகைகளை வைக்க கலெக்டர் உத்தரவு


வணிக நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு தகவல் பலகைகளை வைக்க கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 5 May 2018 11:47 PM GMT (Updated: 5 May 2018 11:47 PM GMT)

வணிக நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு தகவல் பலகைகளை வைக்க மாவட்ட கலெக்டர் ரோகிணி, அனைத்து வணிகர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை மூலம் உணவு பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவு நிறுவனங்களிலும், பல்பொருள் அங்காடிகளிலும் தகவல் பலகைகளை ஒட்டும் நிகழ்ச்சி சேலத்தில் நடந்தது. சேலம் கோர்ட்டு அருகில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி மற்றும் சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள ஒரு பழமுதிர் நிலையம், சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டல் ஆகியவற்றில் உணவு பாதுகாப்பு குறித்த தகவல் பலகைகள் மற்றும் ஸ்டிக்கர்களை மாவட்ட கலெக்டர் ரோகிணி ஒட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அந்த தகவல் பலகையில் விற்பனை வளாகத்தில் பூச்சி தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு தூய்மை காக்கப்படுதல், காய்கறி, பழங்கள், சுத்தமாக நீரில் கழுவுதல், உடல்நலத்துடன் உள்ள பணியாளர்கள் உணவை கையாளுவது போன்ற பொது மக்களுக்கான விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர்கள், சிறு, குறு அங்காடிகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் அங்காடிகள், உணவு வணிகம் புரியும் அனைத்து வணிகர்களும் தங்கள் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு தகவல் பலகை வைத்திருக்க வேண்டும் எனவும், உணவு வணிகர்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் மாதிரி தகவல் பலகை பெற்றுக்கொள்ளவும், உணவு வணிகர்கள் 2 மாதங்களுக்குள் உணவு பாதுகாப்பு தகவல் பலகையை தங்கள் நிறுவனத்தில் வைத்திருக்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் ரோகிணி அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story