சேலம் ரெயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா சிக்கியது


சேலம் ரெயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா சிக்கியது
x
தினத்தந்தி 5 May 2018 11:51 PM GMT (Updated: 5 May 2018 11:51 PM GMT)

சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 36 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சூரமங்கலம்

சேலம் ஜங்சன் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவது தொடர்பாக, அவ்வப்போது சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில் பாதுகாப்பு படைவீரர்கள் ஜங்சன் ரெயில் நிலையத் தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 4-வது பிளாட்பாரத்தின் சிறிய பூங்கா அருகே 5 டிராவல் பேக்குகள் கேட்பாரற்று கிடந்தன. இதை பாதுகாப்பு படை வீரர்கள் திறந்து பார்த்தனர். அதில் பார்சலுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டேப் சுற்றப்பட்டு 20 பண்டல்கள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது உள்ளே கஞ்சா இருப்பது அவர்களுக்கு தெரியவந்தது.

20 பண்டல்களில் 36 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ரூ.7.20 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இந்த கஞ்சாவை சேலம் மாநகர போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பையும் அவர்கள் ஏற்றனர்.

அவர்கள், ஆந்திராவில் இருந்து சேலம் மற்றும் சேலம் வழியாக இயக்கப்பட்ட அனைத்து ரெயில்கள் குறித்த தகவல்களும் பெற்று விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் வைத்தும், இதை கடத்தி வந்த மர்ம ஆசாமிகள் குறித்தும் தீவிரமாக விசாரணை செய்கிறார்கள்.

இந்த சம்பவம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story