டாஸ்மாக் கடையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை


டாஸ்மாக் கடையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை
x
தினத்தந்தி 6 May 2018 10:00 PM GMT (Updated: 6 May 2018 7:09 PM GMT)

டாஸ்மாக் மதுபானக் கடையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையர்கள் வேனில் வந்து திருடிச் சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலூர்,

மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராமத்தில் ஊருக்கு வெளியே டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இதன் சுற்றுவட்டார பகுதிகளில் வேறு மதுபானக்கடைகள் இல்லாததால், இந்த கடையில் கூட்டம் அதிக அளவில் இருக்கும். மேலும் ஊருக்கு வெளியே இந்த மதுக்கடை உள்ளதால் இரவு நேரங்களில் அந்த பகுதி ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கும்.

நேற்றுமுன்தினம் இரவு வழக்கம் போல விற்பனை முடிந்து மதுபானக்கடையை விற்பனையாளர் ராசினாம்பட்டியை சேர்ந்த ஜெயபாண்டி (வயது 41) மற்றும் உடனிருப்பவர்கள் பூட்டிவிட்டு சென்றனர். அதைத்தொடர்ந்து நள்ளிரவில் ஒரு மினி வேனில் வந்த திருடர்கள் கடையின் முன்பு வேனை நிறுத்திவிட்டு, சர்வசாதாரணமாக கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் கடையில் இருந்த மதுபாட்டில் பெட்டிகள் உள்பட அனைத்து மதுபாட்டில்களையும் வேனில் ஏற்றிக்கொண்டு தப்பி சென்று விட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று காலை கடையை திறக்க வந்த ஜெயபாண்டி, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த மதுபாட்டில்கள் அனைத்தும் திருடு போனது கண்டு திடுக்கிட்டார்.

மேலும் இதுகுறித்து மேலவளவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் ஆராயப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story