திருப்பூரில் இரும்பு கம்பியால் தாக்கி பனியன் பிரிண்டிங் பட்டறை உரிமையாளர் கொலை


திருப்பூரில் இரும்பு கம்பியால் தாக்கி பனியன் பிரிண்டிங் பட்டறை உரிமையாளர் கொலை
x
தினத்தந்தி 7 May 2018 5:00 AM IST (Updated: 7 May 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பெண்ணை கட்டிப்போட்டு விட்டு பனியன் பிரிண்டிங் பட்டறை உரிமையாளர் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அந்த பட்டறையில் வேலை செய்த தொழிலாளர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருப்பூர்,

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்தவர் ஜோநோபல்(வயது 35). கடந்த 2½ ஆண்டுகளாக சொந்தமாக பனியன் பிரிண்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்தார்.

கடந்த 1½ மாதத்துக்கு முன்பு இவர் திருப்பூர் கருவம்பாளையம் அக்கரைதோட்டத்தில் பிரிண்டிங் பட்டறை வைத்து அருகிலேயே வீடு எடுத்து தங்கியிருந்தார். இவருடைய பட்டறையில் தென்னம்பாளையத்தை சேர்ந்த தமிழ்செல்வி(47), மதுரையை சேர்ந்த பாண்டியராஜன், சுமன்ராஜ், சென்னையை சேர்ந்த லோகேஷ், சதீஷ் உள்பட 6 பேர் வேலை செய்து வந்தார்கள். நேற்று முன்தினம் பாண்டியராஜன், சுமன்ராஜ் ஆகியோர் சம்பளத்தை பெற்றுக்கொண்டு ஊருக்கு சென்று விட்டனர். பட்டறையில் இரவுப்பணி நடந்துள்ளது. தமிழ்செல்வி உள்பட 4 பேர் வேலை செய்துள்ளனர்.

இந்தநிலையில் நள்ளிரவு 1½ மணி அளவில் பனியன் பிரிண்டிங் பட்டறைக்குள் தமிழ்செல்வியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்துள்ளனர். பட்டறையின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் ஜோநோபல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளார். அவருடைய தலை மற்றும் கழுத்து பகுதியில் காயங்கள் இருந்தன. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஜோநோபலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சென்று தமிழ்செல்வியிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், தமிழ்செல்வி, பிரிண்டிங் பட்டறையில் நள்ளிரவில் ஒரு அறையில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த சதீஷ், லோகேஷ் உள்ளிட்ட 3 பேருக்கும், ஜோநோபலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேரும் சேர்ந்து ஜோநோபலை கொடூரமாக தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு விழித்த தமிழ்செல்வியை 3 பேரும் சேர்ந்து தாக்கியதுடன் அவருடைய கைகளையும், வாயையும் துணியை வைத்து கட்டியுள்ளனர். பின்னர் மேஜையில் இருந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு 3 பேரும் பட்டறையின் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு தப்பி விட்டதாகவும், கட்டுகளை தானாக அவிழ்த்து சத்தம் போட்டதாகவும் தமிழ்செல்வி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஜோநோபலை இரும்பு கம்பியால் தலையில் கொடூரமாக தாக்கியும், கூர்மையான ஆயுதத்தால் கழுத்தில் வெட்டியும் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

தலைமறைவாகியுள்ள 3 பேரின் விவரங்களை சேகரித்து போலீசார் தேடி வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் கயல்விழி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். தமிழ்செல்வியிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சம்பள பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலில் இந்த படுகொலை சம்பவம் நடந்ததா? இல்லை வேறு காரணத்துக்காக இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் மத்திய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பனியன் பிரிண்டிங் பட்டறை உரிமையாளர் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. a

Next Story