பண்ருட்டி அருகே 100 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த வாலிபர் பிணமாக மீட்பு


பண்ருட்டி அருகே 100 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த வாலிபர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 6 May 2018 10:30 PM GMT (Updated: 6 May 2018 8:04 PM GMT)

பண்ருட்டி அருகே பாம்பை துரத்தி சென்ற போது, 100 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள வேகாக்கொல்லையை சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன். இவரது மகன்கள் கோபாலகிருஷ்ணன்(வயது 26), செந்தில்குமார்(22). இவர்களின் பெற்றோர் சிறுவயதில் இறந்ததால், மாமா சொக்கநாதன் என்பவருடன் வசித்து வந்தனர். கோபாலகிருஷ்ணன் விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் தனது விவசாய நிலத்தில் கோபாலகிருஷ்ணன் தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்தார். அப்போது, அந்த பகுதியில் உள்ள வரப்பில் பாம்பு ஒன்று வேகமாக வந்தது.

உடன் பாம்பை கோபால கிருஷ்ணன் துரத்தி சென்றார். அப்போது அந்த பாம்பு அருகில் இருந்த செல்வராஜ் என்வருக்கு சொந்தமான பாழடைந்த தரைக்கிணற்றின் உள்ளே சென்றது. இதையடுத்து கோபாலகிருஷ்ணன் கிணற்றின் அருகே சென்று, அருகில் இருந்த மரக்கிளையை பிடித்தபடி, உள்ளே எட்டி பார்த்தார்.

அப்போது திடீரென மரக்கிளை முறிந்ததால், நிலைதடுமாறிய கோபாலகிருஷ்ணன் கிணற்றின் உள்ளே தவறி விழுந்தார். சுமார் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் 50 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தது. இதற்கிடையே அருகில் உள்ள நிலத்தில் நின்ற கூலி தொழிலாளர்கள், கிணற்றுக்குள் விழுந்த கோபாலகிருஷ்ணனின் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தனர். ஆனால் கிணறு முழுவதும் புதர் மண்டி இருந்ததால், அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.

தொடர்ந்து கிராம மக்கள் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இருள் சூழ்ந்ததால், மீட்பு பணி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து நேற்று காலை முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு வீரர்கள் நேரில் வந்து ஏணி, கயிறு ஆகியவற்றை கொண்டு மீட்பு பணியை தொடங்கினர். அப்போது அங்கிருந்த புதருக்குள் பாம்புகள் அதிகமாக இருந்ததால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

தொடர்ந்து புதர்களை வெட்டி அகற்றி, தேடும் பணி நடந்தது. இதில் மதியம் 3 மணிக்கு கோபாலகிருஷ்ணணை பிணமாக மீட்டனர். அப்போது அங்கிருந்த உறவினர்கள், அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரய்யா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், முத்தாண்டிக்குப்பம் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். தொடர்ந்து கோபாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story