வனத்துறை அதிகாரிகளை கண்டித்து பிச்சாவரத்தில் படகுகளை இயக்காமல் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்


வனத்துறை அதிகாரிகளை கண்டித்து பிச்சாவரத்தில் படகுகளை இயக்காமல் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 6 May 2018 10:45 PM GMT (Updated: 6 May 2018 8:04 PM GMT)

பிச்சாவரத்தில் வனத்துறை அதிகாரிகளை கண்டித்து, படகுகளை இயக்காமல் தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பரங்கிப்பேட்டை,

சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இங்கு 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மருத்துவ குணமுள்ள சுரபுன்னை காடுகளும், அதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்களும் உள்ளன. மேலும் இங்கு பல அரிய வகையிலான ஏராளமான பறவைகளும் உள்ளன. இவற்றை காண்பதற்காக கடலூர் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக கோடை விடுமுறை காலங்களில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து சுற்றுலாத்துறை படகு மூலம் சவாரி செய்து சுரபுன்னை காடுகளின் அழகை ரசித்து செல்வார்கள்.

இதற்காக 43 துடுப்பு படகுகளும், 13 மோட்டார் படகுகளும் சுற்றுலா துறை மூலம் இயக்கப்பட்டு வருகிறது. படகு ஓட்டும் தொழிலில் சுமார் 60 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு இதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் மாலையில் ஒரு படகில் 5 மணிக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு படகு உள்ளே சென்றது. சுரபுன்னை காடுகளை சுற்றிப்பார்த்த அவர்கள், 6.10 மணிக்கு கரை திரும்பினார்கள். இந்த நிலையில் அங்கு வந்த வனத்துறையினர் அந்த படகை ஓட்டி வந்தவரிடம் மாலை 6 மணிக்கு மேல் காட்டுக்குள் படகை இயக்கி செல்லக்கூடாது என்று எச்சரித்தனர். இனி இதை மீறி சென்றால் குண்டர் சட்டத்திடல் கைது செய்வோம் என்று மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சுற்றுலாத்துறையின் படகு ஓட்டும் தொழிலாளர்கள், நேற்று படகுகளை இயக்காமல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறையினரை கண்டித்தும், தொடர்ந்து பிரச்சினை செய்து வரும், வனத்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்த அவர்கள் பின்னர் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

இதற்கிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் தொழிலாளர்கள் படகுகளை இயக்காமல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், அவர்கள் காடுகளை சுற்றிப்பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story