‘நீட்’ தேர்வுக்கான கேள்வித்தாள் தமிழில் வராதது மன்னிக்க முடியாத அநீதியாகும் - வைகோ பேட்டி


‘நீட்’ தேர்வுக்கான கேள்வித்தாள் தமிழில் வராதது மன்னிக்க முடியாத அநீதியாகும் - வைகோ பேட்டி
x
தினத்தந்தி 7 May 2018 4:45 AM IST (Updated: 7 May 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வுக்கான கேள்வித்தாள் தமிழில் வரவில்லை என்பது மன்னிக்க முடியாத அநீதியாகும் என்று கடலூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

கடலூர்,

ம.தி.மு.க.வின் வெள்ளி விழாவையொட்டி கடலூர் மண்டல மறுமலர்ச்சி தொழிற்சங்கம் சார்பில் கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நேற்று கடலூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்றது. இதற்கு தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். பொருளாளர் ரமேஷ் வரவேற்று பேசினார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து, கல்வெட்டை திறந்து வைத்தார். துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மணி, தொழிற்சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார்.

பின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘நீட்’ தேர்வு சமூகநீதியை அழிக்க கூடிய பெரும் கேடு. நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் இந்தியில் வந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பன்முக தன்மையை சிதைக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. சமூகநீதிக்கு வேட்டு வைக்க நீட் தேர்வை கொண்டு வந்தார்கள். தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் வகையில் மாணவ-மாணவிகளை வெளிமாநிலத்துக்கு சென்று தேர்வு எழுத வைத்தார்கள். சோதனை என்ற பெயரில் மிகவும் கேவலமாக நடந்து கொண்டார்கள். இப்போது கேள்வித்தாள் தமிழில் வரவில்லை என்பது மன்னிக்க முடியாத அநீதியாகும்.

காவிரி மேலாண்மை வாரியம், ‘நீட்’ தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை மக்கள் மன்றத்தில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மத்திய அரசு தொடர்ந்து தவறுக்கு மேல் தவறு செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், மறுமலர்ச்சி தொழிற்சங்க மாநில செயலாளர் மணிமாறன், ம.தி.மு.க. நகர செயலாளர் ராமசாமி, துணை செயலாளர் கடல்செல்வம், ஒன்றிய செயலாளர் நாகை ஜெயசங்கர், மத்திய சங்க நிர்வாகிகள் முத்துகுமரசாமி, லட்சுமணன், கோபிநாதன், குமரவேல், தயாளன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் துணை தலைவர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

முன்னதாக சிதம்பரம் நகர ம.தி.மு.க. சார்பில் கட்சியின் 25-ம் ஆண்டு தொடக்க விழா சிதம்பரம் காந்தி சிலை அருகே நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சீனுவாசன் வரவேற்றார். அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்தில் அதிபன், அமைப்பு செயலாளர் வந்தியதேவன், வக்கீல் மோகனசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், மீண்டும் தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ளோம். இந்த நட்பு தொடரும். வெளிமாநிலத்துக்கு நீட் தேர்வை எழுத சென்ற மாணவர்கள் மன அழுத்தத்தோடு எப்படி தேர்வு எழுத முடியும். அவர்கள் அங்கு இருக்க இடம், உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும் என்று அவர் கூறினார். முடிவில் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.


Next Story