“நீட்” தேர்வுக்காக மகனுடன் கேரளா சென்ற அரசு நூலகர் சாவு: மத்திய அரசை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்


“நீட்” தேர்வுக்காக மகனுடன் கேரளா சென்ற அரசு நூலகர் சாவு: மத்திய அரசை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 May 2018 11:15 PM GMT (Updated: 6 May 2018 8:04 PM GMT)

“நீட்” தேர்வுக்காக மகனுடன் கேரளா சென்றபோது மாரடைப்பால் இறந்த அரசு நூலகரின் சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கி உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது47). இவர் திருத்துறைப்பூண்டி அருகே பெருகவாழ்ந்தானில் உள்ள அரசு நூலகத்தில் நூலக அலுவலராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி பாரதிமகாதேவி(40). இவர் மாற்றுத்திறனாளியான இவர் ராயநல்லூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கஸ்தூரிமகாலிங்கம் (17) என்ற மகனும், ஐஸ்வர்யா மகாதேவி (15) என்ற மகளும் உள்ளனர். ஐஸ்வர்யா மகாதேவி எஸ்.எல்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதி உள்ளார். செஸ் வீரரான கஸ்தூரிமகாலிங்கம் மாவட்ட, மண்டல, மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

கிருஷ்ணசாமிக்கு தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை டாக்டராக்க வேண்டும் என்பது கனவு. சமீபத்தில் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதி முடித்த கஸ்தூரி மகாலிங்கத்தை கிருஷ்ணசாமி, மருத்துவ படிப்புக்கான “நீட்” நுழைவு தேர்வுக்கு தயார்படுத்தி வந்தார். இதற்காக பயிற்சி வகுப்புக்கும் அனுப்பினார்.

“நீட்” நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த கஸ்தூரி மகாலிங்கத்துக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணசாமி தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துடன் கடந்த 4-ந் தேதி காரைக்கால்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருவாரூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு புறப்பட்டார். நேற்று காலை கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுத சென்றிருந்த நிலையில், கிருஷ்ணசாமி எர்ணாகுளத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் கிருஷ்ணசாமியை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கிருஷ்ணசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த விளக்குடியில் உள்ள கிருஷ்ணசாமியின் மனைவியும், மகளும் கதறி அழுதனர். இதையடுத்து கிராம மக்கள் அவர்களுடைய வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினர். இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

தமிழகத்தில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை. பல மாணவர்களுக்கு ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. இதனால் கடும் சிரமத்துக்கு மத்தியில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக வெளி மாநிலங்களுக்கு சென்றனர். இந்த நிலையில் “நீட்” தேர்வுக்காக கேரளா சென்ற கிருஷ்ணசாமி மாரடைப்பால் மரணம் அடைந்தது விளக்குடி கிராம மக்களை ஆத்திரம் அடைய செய்தது. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விளக்குடியில் கிராம மக்கள் நேற்று மதியம் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விளக்குடி கைகாட்டியில் நடைபெற்ற இந்த சாலை மறியலுக்கு தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். சாலை மறியல் காரணமாக திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விளக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் ரகுராமன், ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பிரதமர் நரேந்திரமோடியின் உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் தேவையான அளவு நீட் தேர்வு மையங்களை அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக எம்.எல்.ஏ.க்கள் ஆடலரசன், தமிமுன் அன்சாரி, தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் ஆகியோர் கிருஷ்ணசாமியின் வீட்டுக்கு சென்று அவருடைய மனைவி, மகளுக்கு ஆறுதல் கூறினர். இதனிடையே கிருஷ்ணசாமியின் உடலை சொந்த கிராமமான விளக்குடிக்கு எடுத்து வருவதற்காக அவருடைய உறவினர்கள் ராதாகிருஷ்ணன், பக்கிரிசாமி, அஜிதா உள்ளிட்டோர் எர்ணாகுளத்துக்கு புறப்பட்டு சென்றனர். 

Next Story