பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; ஆசிரியர் பரிதாப சாவு


பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; ஆசிரியர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 6 May 2018 10:15 PM GMT (Updated: 6 May 2018 9:33 PM GMT)

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள காளிப்பேட்டையை சேர்ந்தவர் சங்கர் (வயது 48). இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கல்பனா. இவர் கோம்பூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று இரவு சங்கர் மோட்டார் சைக்கிளில் காளிப்பேட்டையில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டிக்கு சொந்த வேலையாக சென்றார். அப்போது வேலூரில் இருந்து சேலம் நோக்கி அரசு பஸ் ஒன்று எதிரே வந்து கொண்டு இருந்தது. சாமியாபுரம் கூட்ரோடு அருகே சென்ற போது பஸ்சும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

ஆசிரியர் சாவு

இந்த விபத்தில் ஆசிரியர் சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த சங்கரின் உடலை, போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story