அந்தியூர் பகுதியில் பலத்த மழை: சூறாவளிக்காற்றில் வாழைகள் முறிந்து நாசம்


அந்தியூர் பகுதியில் பலத்த மழை: சூறாவளிக்காற்றில் வாழைகள் முறிந்து நாசம்
x
தினத்தந்தி 7 May 2018 5:00 AM IST (Updated: 7 May 2018 4:30 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் பகுதியில் பலத்த மழையுடன் சூறாவளிக்காற்று வீசியதால் வாழைகள் முறிந்து நாசம் ஆனது.

அந்தியூர்,

அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 மாதமாக வெயில் கொளுத்தியது. இந்தநிலையில் சில தினங்களாக பகல் நேரத்தில் வெயில் கொளுத்துவதும், இரவில் மழை பெய்வதுமாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கீழ்வானி, மூங்கில்பட்டி, அத்தாணி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.

மேலும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது பலத்த சூறாவளிக்காற்று வீசியதால் கீழ்வானி பகுதியை சேர்ந்த ராசாமி என்பவரின் தோட்டத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்து வாழைகள் முறிந்தன.

இதேபோல் அதேப்பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து என்பவரின் தோட்டத்தில் பயிரிட்டிருந்த வாழைகளும் சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அடியோடு முறிந்து நாசம் ஆனது. கீழ்வானி, மூங்கில்பட்டி பகுதிகளில் மட்டும் 15 ஏக்கர் அளவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் நாசம் ஆனதாக தெரிகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 10 மாத பயிரான வாழைகளை பல ஏக்கர் அளவில் பயிரிட்டிருந்தோம். மேலும் கடந்த 2 மாதத்துக்கு முன்பு நிலவிய வறட்சியால் தண்ணீரை விலைக்கு வாங்கி வாழைகளுக்கு பாய்ச்சினோம். தற்போது வாழைகள் அனைத்தும் குலை தள்ளிய நிலையில் இருந்தன. ஆனால் சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழையால் வாழைகள் அனைத்தும் முறிந்து நாசம் ஆனது. எனவே அரசு எங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான எழுமாத்தூர், கோவில்பாளையம், மின்னப்பாளையம், ஈஞ்சம்பள்ளி, வாத்தியார்காட்டுவலசு உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் மழை பெய்யத்தொடங்கியது. அப்போது சூறாவளிக்காற்றும் வீசியது.

இதனால் கோவில்பாளையத்திலிருந்து ராக்கியாபாளையம் செல்லும் வழியில் கீழ் பவானி வாய்க்கால் பகுதியில் வேப்பமரம் வேருடன் பெயர்ந்து அருகிலிருந்த மின்கம்பங்களில் உள்ள மின்கம்பிகள் மீது விழுந்தது. இதனால் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததுடன் வேப்பமரம் ரோட்டின் மத்தியில் சாய்ந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதேபோல் வாத்தியார்காட்டுவலசு பகுதியில் பொய்யேரி செல்லும் மெயின்ரோட்டின் ஓரத்தில் இருந்த மின்கம்பம் முறிந்து அருகிலிருந்த தர்மலிங்கம் என்பவரின் சுற்றுச்சுவர்மீது விழுந்தது. இதனால் அவரது வீட்டின் அருகே இருந்த மாட்டுக்கொட்டகை சரிந்து விழுந்தது. மேலும் அதேபகுதியில் நடராஜன் என்பவரது வீட்டின் முன்பகுதியில் இருந்த கடையின் சிமெண்டு சிலாப்புகள் சூறாவளிக்காற்றில் தூக்கி வீசப்பட்டன. பெரிய வேப்பமரமும் அடியோடு சாய்ந்தது.

இதேபோல் அதேப்பகுதியை சேர்ந்த பவளாத்தாள், சாமியப்பன் ஆகியோரது வீடு உள்பட மொத்்தம் 7 வீடுகள் சூறாவளிக்காற்றினால் சேதமடைந்தன. மேலும் ஒரு மின்கம்பமும் முறிந்து விழுந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு மின்தடை ஏற்பட்டது. பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தததும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது.

இந்த மழை இரவு 8.15 வரை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

Next Story