நெல்லையில் 10 மையங்களில் 4,214 மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதினர்
நெல்லையில் 10 மையங்களில் 4 ஆயிரத்து 214 மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதினார்கள். கடும் கட்டுப்பாடுகளால் மன உளைச்சல் ஏற்பட்டதாக மாணவிகள் கூறினர்.
நெல்லை,
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவு தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வு நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை ஆங்கிலோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சின்மயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, புஷ்பலதா சி.பி.எஸ்.இ. பள்ளி, வி.எம்.சத்திரம் ரோஸ்மேரி சி.பி.எஸ்.இ. பள்ளி, அந்தோணி பப்ளிக் பள்ளி, வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சங்கர்நகர் ஜெயேந்திரா சரசுவதி பொன்விழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 10 மையங்களில் நடந்தது.
நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் காலை 7 மணி முதலே தேர்வு மையத்துக்கு வர தொடங்கினர். சிலர் பெற்றோரை அழைத்து வந்து இருந்தனர். சில மாணவர்கள் உறவினர்களை அழைத்து வந்து இருந்தனர். மாணவ- மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மாணவ-மாணவிகளுக்கு கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். மாணவிகள் தங்க சங்கிலி, மூக்குத்தி, கம்மல், தலையில் மாட்டுகிற கிளிப், ரப்பர் பேண்ட் போன்றவற்றை அணிந்து வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. சில மாணவிகள் கம்மல், ஜடை கிளிப், ரப்பர் பேண்ட் ஆகியவற்றை அணிந்து வந்து இருந்தனர். அவற்றை பெண் போலீசார் அகற்றினர். மாணவிகள் தனி அறையில் வைத்து சோதனை செய்யப்பட்டனர்.மாணவர்கள் டீசர்ட், பெல்ட், கைக்கெடிகாரம், சங்கிலி, மோதிரம், பிரேஸ்லெட் அணிந்து வரக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. சில மாணவர்கள் கைக்கெடிகாரம், சங்கிலி ஆகியவற்றை அணிந்து வந்தனர். அதை போலீசார் அகற்றினர். செல்போன்கள், உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், கால்குலேட்டர் உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடந்தது. மாணவர்களின் பெற்றோர்கள் தேர்வு மையத்துக்கு வெளியே குவிந்து இருந்தனர். வெயிலையும் பொருட்படுத்தாமல், அவர்கள் சாலையோரம் அமர்ந்து இருந்தனர். நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளிக்கு முன்பாக கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வு எழுத 4 ஆயிரத்து 383 மாணவ-மாணவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் 4 ஆயிரத்து 214 மாணவ-மாணவிகள் மட்டும் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 169 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.
தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த தூத்துக்குடியை சேர்ந்த மாணவி பிரியங்கா கூறும் போது “தூத்துக்குடியில் இருந்து எனது அண்ணனுடன் தேர்வு எழுத வந்து இருக்கிறேன். தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு மையம் இல்லாததால், இங்கு வந்து தேர்வு எழுத வந்து இருக்கிறேன். நான் நீட் தேர்வுக்கு நன்றாக தயார் செய்து இருந்தேன். தனியார் பயிற்சி வகுப்பு சென்று படித்தேன். இருந்தாலும் இயற்பியல், வேதியியல் பாடங்களில் வந்த கேள்விகள் சற்று கடினமாக இருந்தது. ஓரளவு மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த ரம்யா கூறும் போது, “தேர்வு எதிர்பார்த்தது போல் இல்லை. இயற்பியல் பாடத்தில் வந்த கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. என்னால் முடிந்த அளவுக்கு பதில் எழுதி இருக்கிறேன். மதிப்பெண்கள் எந்த அளவுக்கு வரும் என்று தெரியவில்லை” என்றார்.
நெல்லை டவுனை சேர்ந்த ஐஸ்வர்யா கூறும் போது, “நான் சங்கர்நகர் ஜெயேந்திர சரசுவதி பொன்விழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். பிளஸ்-2 படிக்கும் போதே நீட் தேர்வுக்கு எப்படி தயார் செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் கூறினார்கள். அதன் வழிகாட்டுதலின் படி படித்து இருக்கிறேன். தனியாக பயிற்சி வகுப்புக்கு செல்லவில்லை. இருந்தாலும் தேர்வு நன்றாக எழுதி இருக்கிறேன். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
உத்தரபிரதேசம், கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கு தேர்வு மையம் ஒதுக்காமல், நெல்லையில் தேர்வு மையம் ஒதுக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பல மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் தேர்வு எழுத செல்லும் முன்பாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மன உளைச்சல் ஏற்பட்டதாக பெரும்பாலான மாணவிகள் கூறினர்.
Related Tags :
Next Story