இலவசமாக பால் வினியோகித்து விவசாயிகள் நூதன போராட்டம்


இலவசமாக பால் வினியோகித்து விவசாயிகள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 7 May 2018 5:06 AM IST (Updated: 7 May 2018 5:06 AM IST)
t-max-icont-min-icon

கொள்முதல் விலையை நிர்ணயிக்க கோரி இலவசமாக பால் வினியோகித்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.

மும்பை,

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதில்லை எனவும், இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாய சங்கங்கள் சார்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து மாநில அரசு சமீபத்தில் ஒரு லிட்டர் பாலுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.27-ஐ நிர்ணயித்து உத்தரவிட்டது. ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்த உத்தரவு பின்பற்றப்படுவது இல்லை என விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்தநிலையில் விவசாயிகள் அமைப்பான ‘கிசான் சபா’ சங்கத்தினர் மாநிலத்தில் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.27 கொள்முதல் விலை வழங்கக்கோரி மும்பையில் இலவசமாக பால் வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மராட்டிய கிசான் சபா பொதுச்செயலாளர் அஜித் நவலே கூறியதாவது:-

பால் பண்ணைகள் மற்றும் தொழிற்சாலைகளில் ஒரு லிட்டர் பாலுக்கு குறைந்தபட்சம் ரூ.27 கொள்முதல் விலை வழங்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைந்த விலைக்கு பால் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் மராட்டிய தலைமை செயலகம்(மந்திராலயா) முன்பாக பால் வழங்கும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story