வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு அறுவை சிகிச்சை: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை


வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு அறுவை சிகிச்சை: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
x
தினத்தந்தி 8 May 2018 3:45 AM IST (Updated: 8 May 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

வாய் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு அறுவை சிகிச்சை செய்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே புதுகருவாட்சி கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 44), விவசாயி. புகையிலை பொருட்கள் உபயோகப்படுத்தியதன் காரணமாக வாயில் புண் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த மார்ச் மாதம் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது வாயை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் முற்றிய நிலையில் இருந்த புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் கொண்ட குழுவினர் அகற்ற முடிவு செய்தனர்.

இதையடுத்து மருத்துவ கல்லூரி முதல்வர் சங்கரநாராயணன் தலைமையில் மருத்துவ அலுவலர்கள் புகழேந்தி, கதிர், அறுவை சிகிச்சை துறைத்தலைவர் டாக்டர் வெங்கடேஸ்வரன், அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் பரணிதரன், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜா மற்றும் மயக்கவியல் நிபுணர் அடங்கிய மருத்துவ குழுவினர் முருகனுக்கு அறுவை சிகிச்சை மூலம் வாயில் இருந்த புற்று நோய் கட்டியை அகற்றினர். தற்போது முருகன் நலமாக உள்ளார்.

இது குறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் சங்கரநாராயணன் கூறுகையில், வாய் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட புது கருவாட்சி கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகனுக்கு அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டி முழுவதுமாக அகற்றப்பட்டது. இங்கு சிறிய வகையிலான புற்றுநோய் கட்டிகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது. ஆனால் தற்போது முற்றியநிலையில் இருந்த புற்றுநோய் கட்டியை காம்போசிட் என்கிற அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அரசு டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால், குறைந்தது ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவு ஆகியிருக்கும். ஆனால் அரசு மருத்துவமனையில் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் முருகனுக்கு அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்றார். 

Next Story