கோவில்பட்டி அருகே தீப்பெட்டி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்


கோவில்பட்டி அருகே தீப்பெட்டி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 8 May 2018 3:30 AM IST (Updated: 8 May 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே உயர்த்தப்பட்ட கூலியை வழங்கக்கோரி, தீப்பெட்டி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் 200-க்கு மேற்பட்ட பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பல ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த தொழிலாளர்களுக்கு 150 தீப்பெட்டிகளில் தீக்குச்சிகளை அடைப்பதற்கு கூலி ரூ.5-ல் இருந்து ரூ.6 ஆக சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் கோவில்பட்டி அருகே கூசாலிபட்டி பகுதியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உயர்த்தப்பட்ட கூலிக்கு பதிலாக பழைய கூலி ரூ.5 மட்டுமே தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி தீப்பெட்டி தொழிலாளர்கள் நேற்று காலையில் திடீர் வேலைநிறுத்தம் செய்து, கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கிருஷ்ணவேணி, மாவட்ட தலைவர் மோகன்தாஸ், மாவட்ட குழு உறுப்பினர் அருணாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் முருகன் மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முற்றுகையிட்டவர்களிடம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் பாலகணேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், கூலி உயர்வு தொடர்பாக, தொழிலாளர் நலத்துறை நெல்லை, மதுரை மண்டல அதிகாரிகளின் முன்னிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து மதியம் தீப்பெட்டி தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

Next Story