பொட்டல பொருட்கள் குறித்த புகார்களை செல்போன் செயலி மூலம் நுகர்வோர் பதிவு செய்யலாம் தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

பொட்டல பொருட்கள் குறித்த புகார்களை செல்போன் செயலி மூலம் நுகர்வோர் பதிவு செய்யலாம், என தொழிலாளர் உதவி ஆணையர் பாலமுருகன் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
பொட்டல பொருட்கள் குறித்த புகார்களை செல்போன் செயலி மூலம் நுகர்வோர் பதிவு செய்யலாம், என தொழிலாளர் உதவி ஆணையர் பாலமுருகன் தெரிவித்து உள்ளார்.
விழிப்புணர்வு கூட்டம்தூத்துக்குடி தனியார் ஓட்டலில், மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுடன் TN&LMCTS என்ற செல்போன் செயலி (மொபைல் ஆப்) குறித்து மக்கள் மற்றும் நுகர்வோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்துக்கு மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் சரவணன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாலமுருகன் முன்னிலை வகித்து பேசியதாவது:–
எடையளவுகள்கூட்டத்தில், சட்டமுறை எடையளவு அலுவலர்களால் பரிசோதனை செய்யப்பட்டு முத்திரையிடப்பட்ட எடையளவுகளையே வியாபாரத்துக்கு பயன்படுத்த வேண்டும். தரப்படுத்தப்படாத, முத்திரையிடப்படாத எடையளவுகளை பயன்படுத்துதல், உரிய காலத்தில் மறு முத்திரையிடப்படாமல் பயன்படுத்துதல், எடை குறைவாக விற்பனை செய்தல் மற்றும் முத்திரையிடப்பட்டதற்கான பரிசீலனை சான்றினை எடையளவு பயன்படுத்தப்படும் நிறுவனத்தின் வளாகத்தில் தெளிவாக தெரியக்கூடிய இடத்தில் காட்சிக்கு வைக்காமல் இருத்தல் போன்றவை சட்டப்படி குற்றம்.
பொட்டலப் பொருட்களில் பொருள் தயாரிப்பவர், பொட்டலமிடுபவர், இறக்குமதி செய்பவர் ஆகியோரின் பெயர், முழு முகவரி, பொருளின் பெயர், நிகர எடை எண்ணிக்கை, பொட்டலமிடப்பட்ட மாதம், வருடம், அதிகப்பட்ச சில்லறை விற்பனை விலை, நுகர்வோர் புகார் தெரிவிக்க நிறுவனத்தின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்கள் இல்லாமல் பொட்டல பொருட்களை கடைகளில் விற்பனைக்கு வைத்து இருக்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது.
புகார் செய்வது எப்படி?எடையளவுகள், பொட்டலப் பொருட்கள் மற்றும் பொட்டலப் பொருட்களில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கு அதிகமாக விற்பனை செய்தல் ஆகியன குறித்து நுகர்வோர் புகார் தெரிவிக்க ஏதுவாக தொழிலாளர் துறையால் புதிதாக TN&LMCTS என்ற ஒரு செல்போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செல்போன் செயலியை பொதுமக்கள் இலவசமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில் நுகர்வோர் தங்களின் புகார் விவரம், நிறுவனத்தின் முகவரியை பதிவு செய்ய வேண்டும். பொருள் நிறுவனத்தின் புகைப்படம் மற்றும் அது தொடர்பான வீடியோ, ஆடியோக்களை பதிவு செய்யலாம். பதிவு செய்யப்பட்ட புகார் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து, அதன் விவரத்தை புகார் பதிவு செய்தவருக்கு தெரியப்படுத்தப்படும்.
எனவே பொதுமக்கள் பொட்டலப் பொருட்கள் குறித்த புகார்களை இந்த செல்போன் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும், என அவர் தெரிவித்தார்.