நெல்லையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
நெல்லையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை,
நெல்லையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவருடைய உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
கட்டிட தொழிலாளி
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அரியபுரம் ராமேசுவரம் தெருவை சேர்ந்தவர் முருகன். அவருடைய மகன் காவிரி செல்வம் (வயது 23) கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 30–ந் தேதி நெல்லைக்கு வந்துவிட்டு மதியம் நெல்லையில் இருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் ரெயிலில் சென்று கொண்டு இருந்தார். ரெயில் டவுன் அருகே சென்ற போது காவிரி செல்வம் எதிர்பாராதவிதமாக ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருடைய கால்கள் சிதைந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் காவிரி செல்வம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜூலியட் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆஸ்பத்திரி முற்றுகைஇறந்த காவிரி செல்வம் சிகிச்சை பெற்று வந்த ஆஸ்பத்திரியில் அதிக பணம் வாங்கி கொண்ட பிறகும், அவருக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி அவருடைய உறவினர்கள் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் தலைமையில் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார், பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.