தேனியில் டீக்கடைக்காரர் வீட்டில் 47 பவுன் நகைகள் திருட்டு
தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே, டீக்கடைக்காரர் வீட்டில் 47 பவுன் நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் ஈஸ்வரன் (வயது 40). இவர், அதே பகுதியில் மதுரை சாலையோரம் டீக்கடை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி நிரஞ்சனா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் மாலையில் ஈஸ்வரனின் குழந்தைகள் வெளியே சென்று இருந்தனர். ஈஸ்வரனும், அவருடைய மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு டீக்கடைக்கு சென்று விட்டனர். இரவில் வீட்டுக்கு சென்று பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது.
வீட்டுக்குள் இருந்த பீரோ திறந்த நிலையில், அதில் இருந்த ஆடைகள் வெளியே சிதறிக் கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 47 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் திருடப்பட்டிருப்பதை கண்டு ஈஸ்வரன் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
ஈஸ்வரன் வீட்டை பூட்டுச் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே நடந்த இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story