மானூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து டிரைவர் பலி; 2 பேர் படுகாயம் மற்றொரு விபத்தில் பெண் பலி


மானூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து டிரைவர் பலி; 2 பேர் படுகாயம் மற்றொரு விபத்தில் பெண் பலி
x
தினத்தந்தி 9 May 2018 2:30 AM IST (Updated: 9 May 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

மானூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து டிரைவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றொரு விபத்தில் பெண் பலியானார்.

மானூர்,

மானூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து டிரைவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றொரு விபத்தில் பெண் பலியானார்.

டிரைவர் பலி

மானூர் அருகே உள்ள கானார்பட்டியை சேர்ந்தவர் மிக்கேல் சாமிதாஸ் (வயது 48). இவருக்கு நேற்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது உறவினரின் காரில் அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான லாரி டிரைவர் அந்தோணிராஜ் (23), செல்லப்பாண்டியன் என்பவர்களை அழைத்துக்கொண்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டு இருந்தனர். காரை அந்தோணிராஜ் ஓட்டினார். கார் சேதுராயன்புதூர் விலக்கு பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென்று சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அந்தோணிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மிக்கேல் சாமிதாஸ், செல்லப்பாண்டியன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிவுரண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான அந்தோணிராஜின் உடலையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான அந்தோணிராஜிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு விபத்து

பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு மனைவி பொன்னம்மாள் (வயது 52). இவர் நேற்று முன்தினம் காலையில் மெயின்ரோட்டில் நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பொன்னம்மாள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பொன்னம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story