பழனி அருகே, லாரி மீது கார் மோதி 7 பேர் பலி


பழனி அருகே, லாரி மீது கார் மோதி  7 பேர் பலி
x
தினத்தந்தி 10 May 2018 3:30 AM IST (Updated: 10 May 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே நேற்று முன்தினம் இரவு லாரி மீது கார் மோதிய விபத்தில், கேரளாவை சேர்ந்த தம்பதி உள்பட 7 பேர் பலியானார்கள். பழனிக்கு சாமி தரிசனத்துக்காக வந்தபோது இந்த துயரம் நடந்துள்ளது.

பழனி

கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த முண்டகயம் அருகே உள்ள கோரத்தோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 52). வியாபாரி. இவருடைய மனைவி லேகா (49). இவர்களுடைய மகன் மனு (27). இவர்கள் பழனி கோவிலுக்கு உறவினர்களுடன் செல்ல முடிவு செய்தனர்.

அதையடுத்து அதே பகுதியை சேர்ந்த சசி (62), அவருடைய மனைவி விஜயம்மா (60), இவர்களின் பேரன்கள் அபிஜித் (14), ஆதித்யன் (12) மற்றும் பாபு மனைவி சஜினி (50) ஆகியோருடன் நேற்று முன்தினம் பிற்பகல் 3½ மணியளவில் சுரேஷ் குடும்பத்தினர் ஒரு காரில் பழனிக்கு புறப்பட்டனர். காரை சுரேஷ் ஓட்டினார். அவர்களது கார் குமுளி, கம்பம், தேனி, திண்டுக்கல் வழியாக பழனிக்கு வந்துகொண்டிருந்தது.

திண்டுக்கல்-பழனி சாலையில் ஒட்டன்சத்திரத்தை அடுத்த சிந்தலவாடம்பட்டி அருகே நள்ளிரவில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. அப்போது எதிரே பழனியை அடுத்த பழைய ஆயக் குடியில் இருந்து இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு மதுரை செல்வதற் காக ஒட்டன்சத்திரம் நோக்கி ஒரு லாரி வந்துகொண்டிருந்தது.

கார் தாறுமாறாக சாலையில் வருவதை பார்த்த டிரைவர் லாரியை நிறுத்த முயன்றார். ஆனால் அதற்குள் கார், லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சுரேஷ், சசி, விஜயம்மா, மனு ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த பழனி, சத்திரப்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கார், லாரிக்குள் புகுந்து இருந்ததால் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் காரை வெளியே எடுத்து உடல்களை போலீசார் மீட்டனர்.மேலும் படுகாயமடைந்த அபிஜித், ஆதித்யன், லேகா, சஜினி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அபிஜித் பரிதாபமாக இறந்தான்.

லேகா மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக இறந்தார். சஜினியும், ஆதித்யனும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காமல் சஜினி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. ஆதித்யனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான தேனி மாவட்டம் தென்கரையை சேர்ந்த அய்யப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story