விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் எதிர்ப்போம் தஞ்சையில், ஜி.கே.வாசன் பேட்டி


விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் எதிர்ப்போம் தஞ்சையில், ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 10 May 2018 4:30 AM IST (Updated: 10 May 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் எதிர்ப்போம் என தஞ்சையில் ஜி.கே.வாசன் கூறினார்.

தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினையில் 2 தேசிய கட்சிகளின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. தமிழகத்தை வஞ்சிக்கும் இந்த தேசிய கட்சிகளை இனிமேல் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு 10 நாட்கள் கால அவகாசம் கேட்டது ஏற்புடையதல்ல.

அதேபோல 14-ந் தேதி வரை சுப்ரீம் கோர்ட்டு கால அவகாசம் வழங்கியது வருத்தம் அளிக்கிறது. 4 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு ஏன் கொடுக்கவில்லை? என்று கோர்ட்டு கேள்வி கேட்காதது ஏமாற்றமாக உள்ளது. விவசாயிகளின் உயிர் பிரச்சினை முக்கியம் அல்ல. கர்நாடக தேர்தல் தான் முக்கியம் என்று மத்திய அரசு, தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.

தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. காலம் தாழ்த்தாமல், சட்டத்தை மதித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடிய உறுதியான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்க வேண்டும். 4 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு உடனே வழங்க வேண்டும்.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை திணிக்க நினைப்பது ஏற்புடையதல்ல. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் எதிர்ப்போம். விவசாயிகளுடன் இணைந்து போராடுவோம். திருமானூர் ஒன்றியத்தில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க ஐகோர்ட்டு தற்காலிக தடை விதித்து இருப்பதை வரவேற்கிறோம். இந்த தடையை நிரந்தரப்படுத்த வேண்டும். அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டத்தை தமிழக அரசு ஒடுக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

நீட் தேர்வு குழப்பத்திற்கு சி.பி.எஸ்.இ.யின் நிர்வாக திறமையின்மை தான் காரணம். பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணையை முடித்து இதில் சம்பந்தப்பட்டவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். த.மா.கா.வை வலுப்படுத்த வேண்டும் என்று கிராமங்கள் தோறும் 2 கட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். 3-வது கட்ட சுற்றுப்பயணம் அடுத்த மாதம்(ஜூன்) 2-வது வாரத்தில் தொடங்கப்படும். தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

காவிரி பிரச்சினைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். காவிரி பிரச்சினைக்கான போராட்டத்திற்கு யார் அழைத்தாலும் பங்கேற்போம். காவிரி பிரச்சினைக்காக கர்நாடகத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேராதது பலவீனம் தான். நமது உரிமையை படிப்படியாக நாம் இழந்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story