கோவையில் இடி-மின்னலுடன் பலத்த மழை
கோவையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பெய்த பலத்த மழையினால் சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
கோவை,
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெப்பம் அதிகமாக உள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு 7 மணியளவில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. பின்னர் இரவு முழுவதும் மழை தூறிக் கொண்டே இருந்தது.
பலத்த மழை காரணமாக கோவையின் முக்கிய சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோவை அவினாசி சாலை மேம்பாலம், வடகோவை மேம்பாலம் ஆகியவற்றின் கீழ் மழை தண்ணீர் தேங்கி நின்றது. இதில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் பெரும்பாலான வாகனங்கள் பாலத்தின் மேலே சென்றன. இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவை மாநகரம் மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்ததால் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இந்த ஆண்டு கோடை மழை எதிர்பார்த்ததை விட அதிகமாகவே பெய்துள்ளது என்று காலநிலை ஆராய்ச்சி மைய அதிகாரி பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 25 மி.மீட்டரும், அடிவாரத்தில் 17 மி.மீட்டரும் மழை பெய்தது. அணையின் மொத்த நீர்மட்டம் 51 அடி. நேற்று நீர்மட்டம் 22 அடியாக இருந்தது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. எனவே வருகிற ஜூலை மாதம் வரை சிறுவாணி குடிநீருக்கு தட்டுப்பாடு வராது என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார். சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி என்பவரது தென்னந்தோப்பில் தென்னை மரத்தை மின்னல் தாக்கியது. இதில் அந்த தென்னை மரம் தீ பிடித்து எரிந்தது.
Related Tags :
Next Story