‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழக மக்களை வஞ்சிக்கிறது’ வைகோ பேச்சு


‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழக மக்களை வஞ்சிக்கிறது’ வைகோ பேச்சு
x
தினத்தந்தி 11 May 2018 4:30 AM IST (Updated: 10 May 2018 11:54 PM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழக மக்களை வஞ்சிக்கிறது என்று திருக்கடையூரில் வைகோ பேசினார்.

திருக்கடையூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாகை மாவட்டம், திருக்கடையூர் சன்னதி வீதியில் நேற்று முன்தினம் விவசாய பாதுகாப்பு இயக்கம் சார்பில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலும் ஒன்று. எமனை சம்ஹாரம் செய்த இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தமிழகம் தற்போது பல்வேறு தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளது. பெரியார் காலத்திலோ, அண்ணா, கருணாநிதி காலத்திலோ கூட இப்படி ஒரு அழிவு தமிழகத்தை தேடி வந்ததில்லை. தமிழகத்திற்கு காவிரி நீரை கொடுக்க கூடாது என்பதில் கர்நாடக மாநில அரசு பிடிவாதமாக உள்ளது. தற்போது கர்நாடக அரசு அணைகளை கட்ட நிதி ஒதுக்கி உள்ளது. இந்த அணைகள் கட்டி முடித்தால் கர்நாடகத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் கபிணி அணையும், கிருஷ்ணராஜசாகர் அணைக்கும் தண்ணீர் வராது. அதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் என்பதே கானல் நீராகிவிடும். இந்த 2 அணைகளையும் கட்டாமல் தடுக்கின்ற உரிமை காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மட்டுமே உண்டு. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று கூறி பல மாதங்களாகியும் தற்போது வரை மத்திய அரசு அமைக்காமல் தமிழக மக்களை வஞ்சிக்கிறது. இந்த பிரச்சினையை பிரதமர் நரேந்திரமோடியிடம் எடுத்து சொல்ல அனைத்து கட்சி தலைவர்களும், முதல்–அமைச்சர், எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து நேரத்தை ஒதுக்குமாறு கேட்டும் பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை.


ஏற்கனவே தமிழகத்தில் ஹைட்ரோகார்பன், ஷேல் கியாஸ், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களால் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு தண்ணீர் தராமல் இருந்தால் தமிழகமே பாலைவனமாகி விடும். எவ்வளவுதான் தமிழக அரசு வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடினாலும், மத்திய அரசு வக்கீல் அட்டானிக் ஜெனரல் வேணுகோபால் கர்நாடாகத்தில் உள்ள வாட்டால் நாகராஜ் போல் வாதாடி வருகிறார். தமிழகத்திற்கு நீதியின் குரல் உடைக்கப்பட்டு அநீதியின் பாறை மக்களிடம் போடப்பட்டுள்ளது. அதனால் தமிழர்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து டெல்டா பகுதிகளில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களை செயல்படாமல் தடுத்து நிறுத்த வேண்டும். அப்போதுதான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முன்வரும். பிரதமர் நரேந்திரமோடி இனி எந்தவொரு காலமும் பிரதமர் நாற்காலியில் அமர முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது காவிரி மேலாண்மை வாரிய பிரசார செம்பனார்கோவில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சுந்தரவடிவேல், மாணவர் அணி ஒன்றிய அமைப்பாளர் வசந்தகுமார், கிளை செயலாளர் பொன்னுசாமி, ஊராட்சி செயலாளர் சேகர், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் உள்ளிட்டோர் இருந்தனர்.


Next Story