மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 10 May 2018 10:30 PM GMT (Updated: 10 May 2018 6:47 PM GMT)

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பது அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. போதிய மழை பெய்யாததாலும், கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்காததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து இருந்தது. அதாவது கடந்த மாதத்தில் அணைக்கு வினாடிக்கு 500 கன அடிக்கும் குறைவாகவே தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது கோடை மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்து வினாடிக்கு 1000 கன அடிக்கு மேல் வந்து கொண்டுள்ளது.

நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 970 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனிடையே நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்தது. இதன் காரணமாக அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இதன்படி நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 577 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் 35.03 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 35.21 அடியாக உயர்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

Next Story