மாவட்ட செய்திகள்

பெண்ணை அடித்துக்கொன்று நகைகள் கொள்ளை + "||" + Jewelry robbing the girl

பெண்ணை அடித்துக்கொன்று நகைகள் கொள்ளை

பெண்ணை அடித்துக்கொன்று நகைகள் கொள்ளை
ஒரத்தநாடு அருகே பெண்ணை அடித்துக்கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருமங் கலக்கோட்டை மேலையூர் மேலத்தெருவை சேர்ந்தவர் கதிரேசன். இவருடைய மனைவி ஜெயராணி(வயது 55). இவர்களுக்கு சத்யா என்ற மகளும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர். சத்யாவுக்கு திருமணமாகி விட்டது. கதிரேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.


இதனால் ஜெயராணி தனது மகன் சக்திவேலுவுடன் வசித்து வந்தார். ஜெயராணி தினமும் காலையில் தான் வளர்த்து வரும் பசுமாட்டை வயல் பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வார். அங்கு மேய்த்து விட்டு வீடு திரும்புவது வழக்கம். நேற்று காலை 7 மணிக்கு வழக்கம்போல் மாடு மேய்க்க ஜெயராணி அவரது வீட்டிலிருந்து சென்றார். இதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதற்கிடையே அவரது வீட்டில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தோப்பில் தலையில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் ஜெயராணி பிணமாக கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் எடையுள்ள இரண்டு சங்கிலிகளை காணவில்லை. ஆனால் அவர் அணிந்திருந்த தோடு, மூக்குத்தி ஆகியவை அப்படியே இருந்தது. ஜெயராணியை அடித்துக்கொன்ற மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த தங்க சங்கிலிகளை திருடி சென்று இருக்கலாம் என தெரிகிறது. ஜெயராணி கொல்லப்பட்டது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவருடைய மகன் சக்திவேல் தனது தாயாரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) செங்கமலக்கண்ணன், பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் தஞ்சையில் இருந்து தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸ் மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. பின்னர் ஜெயராணியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஜெயராணியின் மகன் சக்திவேல் அளித்த புகாரின் பேரில் பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராணி நகைக்காக கொல்லப்பட்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு எதுவும் காரணங்கள் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாடு மேய்க்க சென்ற பெண்ணை அடித்துக்கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.