சாமிதோப்பு அய்யா வைகுண்டர் கோவிலை மீட்க கோரி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சாமிதோப்பு அய்யா வைகுண்டர் கோவிலை மீட்க கோரி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 May 2018 4:30 AM IST (Updated: 11 May 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

சாமி தோப்பு அய்யா வைகுண்டர் கோவிலை மீட்க கோரி இந்து மக்கள் கட்சினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை,

சாமி தோப்பு அய்யா வைகுண்டர் கோவிலை மீட்க வலியுறுத்தியும், அய்யா வழி அன்பு குடிமக்கள் அறவாரியம் அமைத்து அதன் கீழ் செயல்பட வலியுறுத்தியும் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நேற்று காலை 10 மணிக்கு இந்து மக்கள் கட்சியினர் மற்றும் சரவணம்பட்டியை சேர்ந்த அய்யா வைகுண்ட சிவபதி நிர்வாக அறங்காவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு அய்யா வைகுண்ட சிவபதி நிர்வாக அறங்காவலர் கே.அரிராமன் தலைமை தாங்கினார்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை பால பிரஜாபதி அடிகளார் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். இந்த கோவிலில் உள்ள அய்யா வைகுண்ட சாமி தனது பூட்டன் என்றும் நாங்கள் 6-வது தலைமுறை வாரிசு என்றும் பால பிரஜாபதி அடிகளார் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

அய்யா வைகுண்டர் மனிதர் அல்ல சாமி தான். அந்த கோவிலை தமிழக அரசு பால பிரஜாபதி அடிகளார் குடும்பத்தினரிடம் இருந்து மீட்டு அய்யா வழி அன்பு குடிமக்கள் அறவோர் என்ற வாரியத்தை அமைத்து அதன் கீழ் நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதில் இந்து மக்கள் கட்சி (தமிழகம்) மாநில தலைவர் அர்ஜூன் சம்பத், தொழிற்சங்க நிர்வாகி திருப்பதி, சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வேலுமயில், சூலூரில் உள்ள அய்யா வைகுண்ட திருப்பதி நிர்வாக அறங்காவலர்கள் அலெக்ஸ் ராஜன், கண்ணன், சரவணம்பட்டியை சேர்ந்த அய்யா வைகுண்ட சிவபதி நிர்வாக அறங்காவலர்கள் சிவகிருஷ்ணன், ராமநாதன், இந்து எழுச்சி இயக்க தலைவர் நெல்லை மணிகண்டன், அகில உலக அய்யா வழி சேவை மைய நிர்வாகி கிருஷ்ணமணி அப்புக்குட்டி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story