குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 11 மின் மோட்டார்கள் பறிமுதல்


குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 11 மின் மோட்டார்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 May 2018 12:03 PM IST (Updated: 11 May 2018 12:03 PM IST)
t-max-icont-min-icon

நாகை பகுதியில் குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 11 மின் மோட்டார்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய்களில் மின் மோட்டார்களை பொருத்தி குடிநீர் உறிஞ்சப்படுவதாக நாகை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரவிச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆணையர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் வசந்தன், மின் பணியாளர் கந்தசாமி மற்றும் நகராட்சி ஊழியர்கள் நாகை நகராட்சிக்குட்பட்ட வெளிப்பாளையம் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது வெளிப்பாளையம் காளியம்மன் கோவில் பகுதியில் ஆய்வு செய்தபோது அந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் குழாய்களில் மின் மோட்டார்களை பொருத்தி குடிநீர் உறிஞ்சப் படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 11 மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் இதுகுறித்து ஆணையர் ரவிச்சந்திரன் கூறுகையில், நாகை பகுதியில் தற்போது கோடை காலத்தையொட்டி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் நகராட்சியில் இருந்து வினியோகிக்கப்படும் குடிநீர் அனைத்து பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் வீடுகளுக்கு எடுக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் அடிக்கடி புகார் அளித்து வருகின்றனர். மின் மோட்டார் பயன்படுத்தி குடிநீர் உறிஞ்சப்படுவதால், பொதுக்குழாய்களில் தண்ணீர் கிடைப்பது இல்லை. எனவே மின் மோட்டார்கள் பயன்படுத்தி குடிநீர் உறிஞ்சினால் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்வதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும்.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story