மாவட்ட செய்திகள்

‘நீட்’டா? நீதிக்கு வேட்டா? + "||" + Conterovacy on NEET exam

‘நீட்’டா? நீதிக்கு வேட்டா?

‘நீட்’டா? நீதிக்கு வேட்டா?
நீட் தேர்வு எழுதுவதற்குத் தமிழ்நாட்டு பிள்ளைகள் பட்ட துன்பம் சொல்லில் அடங்காத சோகக் காவியம் ஆகும்.
மொழி தெரியாத இடங்களில் முகம் அறியாத மனிதர்களின் சூழலில் இரக்கம் என்பதே அறியாதவர்கள் நடத்திய தேர்வு நீட் தேர்வு. சிங்கத்தின் வாயில் தலைநுழைத்து மீண்டதைப் போல் துன்பமும் அதிர்ச்சியும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது.

எல்லாத் துன்பங்களிலும் மிகப் பெரிய துன்பம் கேள்வித்தாள் வடிவத்தில் நேர்ந்துள்ளது. நீட் தேர்வுக்குரிய கேள்வித்தாள்களில் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள 180 கேள்விகளுள் 46 கேள்விகள் மிகவும் தவறாக மொழிபெயர்க்கபட்டுள்ளன. தேர்வுக்கூடத்தில் தேர்வெழுதும்போது பிழையான கேள்வித்தாள்களைப் படித்து மாணவர்கள் எவ்வளவு அதிர்ச்சி அடைந்திருப்பார்கள்?

ஒரு தன்னார்வ நிறுவனம் இதனைக் கண்டறிந்து இதன்விளைவாக விடை வழங்கமுடியாமல் குழம்பிப்போன மாணவர்களுக்கு 196 புள்ளிகள் வழங்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஏன் இந்தக் குழப்பம்? “பொட்டு வைக்கக்கூடாது. காப்புக்கயிறு கட்டக்கூடாது. மூக்குத்தியைக் கழற்றவேண்டும். கொலுசைக் கழற்றவேண்டும்” என்றெல்லாம் கெடுபிடி காட்டிய மத்திய இளநிலைக் கல்வி வாரியம் முறையான கேள்வித்தாளை மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்பதில் ஏன் கருத்துச் செலுத்தவில்லை? யார் மொழிபெயர்த்தார்கள்? மொழிபெயர்ப்பை ஏன் சரிபார்க்கவில்லை?

ஒரு தேர்வு நடத்தும்போது பல கட்டங்களில் கூர்ந்தாய்வு நடத்தப்படுவது முறையாக உள்ளது. கேள்வித்தாளைச் சரிபார்க்க ஒருவர், மொழிபெயர்க்க ஒருவர், மொழிபெயர்ப்பைச் சரிபார்க்க ஒருவர், அச்சுக்குப் போகுமுன்னும் அச்சடித்த பின்பும் சரிபார்க்க ஒருவர் என்று பலரது கூட்டுமுயற்சியாலேயேதேர்வுகள் நடத்தப்படுவதை நம் பல்கலைக்கழகங்களிலும் அரசினரின் தேர்வுகளிலும் காண்கிறோம். அத்தகைய முன்னெச்சரிக்கையும் கூர்ந்தாய்வும் பல்லாயிரக்கணக்கானவரின் வாழ்வைத் தீர்மானிக்கும் நீட் தேர்வுமுறையில் ஏன் பின்பற்றப்படவில்லை என்னும் வினாக்கள் அனைவர் மனத்திலும் அலையடிக்கின்றன.

இந்தத் தவறான மொழிபெயர்ப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழில் எழுதிய தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு நடத்திய மத்திய இளநிலைக் கல்வி வாரியம் 196 புள்ளிகளை வழங்கி மாணவர்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்கச் செய்யும் என நம்புகிறோம்.

இனிவரும் ஆண்டுகளில் இத்தகைய தவறுகள் நடக்காமல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

- மறைமலை இலக்குவனார்


தொடர்புடைய செய்திகள்

1. ‘நீட்’ தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் மத்திய அரசுக்கு, அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
செவிலியர் படிப்புக்கு ‘நீட்’ தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
2. 2 முறைக்கு பதிலாக ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு?
பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுதோறும் தேசிய அளவில் ‘நீட்’ எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
3. நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தகவல் வெளியான விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தகவல் வெளியான விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
4. ‘நீட்’ தேர்வு எழுத வயது வரம்பு: இடைக்கால நிவாரணம் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
‘நீட்’ தேர்வு எழுத வயது வரம்புக்கான இடைக்கால நிவாரணம் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
5. ‘நீட்’ தேர்வு : தமிழக மாணவர்களை பலிகடா ஆக்கக்கூடாது டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
‘நீட்’ தேர்வு வினாத்தாள் தவறுக்கு எந்த அரசு காரணமாக இருந்தாலும், அதற்கு தமிழக மாணவர்களை பலிகடா ஆக்கக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.