சேலத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை இடிக்க பெற்றோர் எதிர்ப்பு


சேலத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை இடிக்க பெற்றோர் எதிர்ப்பு
x
தினத்தந்தி 12 May 2018 4:00 AM IST (Updated: 12 May 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

சேலம் தேர்வீதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை இடிப்பதற்கு மாணவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர்.

சேலம்,

சேலம் மாநகராட்சி 32–வது வார்டுக்குட்பட்ட தேர்வீதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. 1–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 100–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

1936–ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. இந்த பள்ளியில் சேலம் தேர்வீதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் அதிகளவில் படித்து வருகிறார்கள். பள்ளிக்கூட வளாகத்தில் அம்மாபேட்டை கணினிவரி வசூல் மையம், யுனானி மருந்தகம், பிறப்பு–இறப்பு பதிவு அலுவலகம் ஆகியவையும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாநகராட்சி பள்ளி கட்டிடம் பழுதடைந்துவிட்டதாகவும், இதனால் அந்த பள்ளியை இடித்துவிட்டு வணிக வளாகம் கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அம்மாபேட்டை உதவி ஆணையர் ஜெயராஜ் மூலம், பள்ளி தலைமை ஆசிரியருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வீதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை இடிப்பதற்கு மாணவ–மாணவிகளின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர் தரப்பில் ரத்தினம், மாணிக்கம் ஆகியோர் கூறியதாவது:–

90 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் தேர்வீதியில் ஏழை குழந்தைகளின் கல்வி அறிவை கவனத்தில் கொண்டு சமூக ஆர்வலர் ஒருவர், பள்ளிக்கூடம் கட்டுவதற்கு இடத்தை தானமாக கொடுத்துள்ளார். 1936–ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த மாநகராட்சி பள்ளியில் 500–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வந்தனர். தற்போது குறைந்த அளவிலேயே மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த பள்ளி கட்டிடம் இன்னும் 100 ஆண்டுகளுக்கு தரமான கட்டிடமாக இருக்கும்.

பள்ளி குழந்தைகளுக்கு போதிய கழிவறை மற்றும் குடிநீர் வசதி இல்லாத நிலை உள்ளது. பள்ளி வளாகத்தில் யுனானி மருந்தகம், மாநகராட்சி கணினி வரி வசூல் மையம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் ஆக்ரமித்துள்ளது. அதை பள்ளியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மாநகராட்சி பள்ளியை வணிக வளாகமாக மாற்றக்கூடாது. இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். எனவே, மாநகராட்சி நிர்வாகம் தங்களது முடிவை மாற்றிவிட்டு பள்ளியை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story