மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் சுடுகாடு கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் + "||" + Roadblock in Thiruvannamalai Asking the public burial ground

திருவண்ணாமலையில் சுடுகாடு கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

திருவண்ணாமலையில் சுடுகாடு கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
திருவண்ணாமலையில் சுடுகாடு கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
திருவண்ணாமலை,-

திருவண்ணாமலை அருகே தேனிமலை பகுதியில் சாலையோரம் சுமார் 1½ ஏக்கர் காலி நிலம் உள்ளது. இந்த நிலத்தை தேனிமலை, அண்ணாநகர், பார்வதி நகர் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் இந்த சுடுகாட்டின் ஒருபகுதி தங்களுடையது என ஒரு தரப்பினர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, மனுதாரரின் நிலத்தை அளந்து ஒப்படைக்குமாறு வருவாய்த்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி நிலத்தை அளக்க நேற்று வருவாய்த்துறையினர் பொக்லைன் எந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் நிலத்தை அளக்கும்முன் அங்கு வளர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றினர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்கள் நிலத்தை அளக்கக்கூடாது என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தண்டராம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். பேச்சுவார்த்தை நடந்ததால் மறியலை கைவிட்டு சாலையோரம் பொதுமக்கள் சென்றனர்.

அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மீண்டும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் போலீசார் அவர்களை அகற்ற முற்பட்டனர்.

அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் மறியலில் ஈடுபட்டவர்களை சாலையோரம் அகற்றி போலீசார் அரண் போல் நின்று வாகனங்கள் செல்ல வழிவகை செய்தனர்.

மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் திடீரென மயக்கம் அடைந்தார். அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர், மீண்டும் அவர்கள் போலீசாரை தள்ளிவிட்டு மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். அப்போது பெண்கள் வேனில் ஏற்றியவர்களை விடுவிக்கக்கோரி போலீஸ் வேனை முற்றுகையிட்டனர். மேலும் அங்குள்ள ஆண்களை வேனில் ஏற்ற போலீசார் முற்பட்டனர். இதனை பெண்கள் தடுத்தனர். அதிக அளவில் பெண்கள் இருந்ததால் ஆண் போலீசார் அவர்களை மீறி மறியலில் ஈடுபட்ட ஆண்களை கைது செய்ய முடியவில்லை.

இதற்கிடையே திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற அதிகாரிகள் நிலத்தை அளக்க வந்துள்ளனர். நிலத்தை அளக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் எதிர்ப்பு தொடர்ந்ததால் வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) நிலத்தை அளக்க அதிகாரிகள் முடிவு செய்து அங்கிருந்து சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் 3 தலைமுறைகளாக இந்த இடத்தை சுடுகாடாக பயன்படுத்தி வருகிறோம். தற்போது எங்களுக்கு சுடுகாடு இல்லை என்றால் நாங்கள் எங்கு சென்று இறந்தவர்களை புதைப்பது. 30 ஆயிரம் மக்களுக்கு வேறு இடம் கிடையாது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தலையிட்டு எங்களுக்கு மீண்டும் அந்த இடத்தை மீட்டு தரவேண்டும் என்றனர்.

அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஊத்துக்கோட்டை அருகே தவறவிட்ட நகை, பணத்தை மீட்டு ஒப்படைத்த விவசாயி பொதுமக்கள் பாராட்டு
ஊத்துக்கோட்டை அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த பணம் மற்றும் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த விவசாயியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
2. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3. திருத்துறைப்பூண்டி அருகே பாரபட்சமின்றி புயல் நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருத்துறைப்பூண்டி அருகே பாரபட்சமின்றி புயல் நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4. இந்து முன்னணியினர் –பொதுமக்கள் மோதிக்கொண்ட விவகாரம்: இருதரப்பையும் சேர்ந்த 100 பேர் மீது வழக்குப்பதிவு
ஊதியூரில் தனியார் நிறுவனம் பால்பண்ணை கட்டும் விவகாரம் தொடர்பாக இந்து முன்னணியினர்–பொதுமக்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் இருதரப்பையும் சேர்ந்த 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
5. பொங்கலூர் அருகே பொங்கல் பரிசு பொருட்கள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
பொங்கலூர் அருகே பொங்கல் பரிசு பொருட்கள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.