காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி விமானப்படை தளத்தை முற்றுகையிட முயற்சி 370 பேர் கைது


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி விமானப்படை தளத்தை முற்றுகையிட முயற்சி 370 பேர் கைது
x
தினத்தந்தி 12 May 2018 11:00 PM GMT (Updated: 12 May 2018 6:49 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கக்கோரி தஞ்சை விமானப்படை தளத்தை காவிரி உரிமை மீட்புக் குழுவினர் முற்றுகையிட முயற்சி செய்தனர். இதில் பங்கேற்ற பெண்கள் உள்பட 370 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். காவிரி சமவெளியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு பணிக்காக ராணுவத்தை அனுப்பக்கூடாது.

தீபக்மிஸ்ரா ஆணையம் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு முரணாக வழங்கியுள்ள தீர்ப்பை மாற்றிட சுப்ரீம் கோர்ட்டு அரசமைப்பு ஆணையம் அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை விமானப்படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என காவிரி உரிமை மீட்புக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி தஞ்சை மேலவஸ்தாசாவடி ரவுண்டானாவில் இருந்து காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் முருகேசன், தமிழ் தேசிய பேரியக்க பொதுச் செயலாளர் வெங்கட்ராமன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், சமவெளி விவசாயிகள் இயக்க தலைவர் பழனிராஜன், தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு.

இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர் ராஜ், வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் கணேசன், வணிகர் சங்கங்களின பேரமைப்பு மாவட்ட தலைவர் பாண்டியன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி வக்கீல் நல்லதுரை மற்றும் பல்வேறு அமைப்பினர், விவசாயிகள், வணிகர்கள், பெண்கள் என 300-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டு பல்வேறு கோஷங்களை எழுப்பியபடி தஞ்சை விமானப்படை தளத்தை நோக்கி சென்றனர்.

இவர்களை தடுத்து நிறுத்துவதற்காக புதுக்கோட்டை சாலையில் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளை ஏற்படுத்தி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தஞ்சை-திருச்சி பைபாஸ் சாலையை கடந்து ஊர்வலம் சென்றபோது, சாலையின் குறுக்கே இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளை போலீசார் ஏற்படுத்தி இருந்ததால் அதற்கு மேல் ஊர்வலமாக சென்றவர்களால் செல்ல முடியவில்லை. மேலும் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையிலான போலீசார், ஊர்வலமாக வந்தவர்களை கைது செய்ய முயற்சி மேற்கொண்டனர்.

தஞ்சை விமானப்படை தளம் அருகே வரை எங்களை அனுமதிக்காமல் 1 கிலோ மீட்டருக்கு முன்பாகவே கைது செய்ய நடவடிக்கை எடுப்பது ஜனநாயக முறையல்ல. நாங்கள் யாரும் கைதாகமாட்டோம். காந்தி வழியில் அகிம்சை போராட்டம் நடத்துவோம் என்று கூறி போராட்ட குழுவினர் அனைவரும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பலமுறை சென்று கைதாகும்படி வலியுறுத்தியும் கைதாக மாட்டோம் என்று உறுதிபட தெரிவித்தனர்.

இதனால் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயச்சந்திரன், அன்பழகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், பெ.மணியரசன் உள்பட சிலரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்ய முயற்சி செய்தனர்.

உடனே இளைஞர்கள் சிலர், யாரையும் குண்டுக்கட்டாக தூக்க விடாமல் தடுத்ததுடன் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்ட குழுவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கைது நடவடிக்கையை போலீசார் தற்காலிகமாக கைவிட்டனர்.

பின்னர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்ததுடன், போலீசாரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப் பட்டன. போலீசார் மீண்டும் போராட்ட குழுவினரிடம் சென்று கைது செய்வதாக கூறியதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து வேன், மினிபஸ்கள் ஆகிய வற்றில் ஏற்றினர். மொத்தம் 36 பெண்கள் உள்பட 370 பேர் கைது செய்யப்பட்டனர். 

Next Story