கீரனூர், சித்தன்னவாசல் பகுதிகளில் பலத்த மழை மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது


கீரனூர், சித்தன்னவாசல் பகுதிகளில் பலத்த மழை மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது
x
தினத்தந்தி 12 May 2018 10:45 PM GMT (Updated: 12 May 2018 8:14 PM GMT)

கீரனூர், சித்தன்னவாசல் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதில் பலத்த காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதலே கீரனூர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. பின்னர் மாலை 4 மணி அளவில் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழையால் சாலையில் மழைநீர் ஆறுபோல ஓடியது. கீரனூர் தெற்கு ரத வீதியில் வடிநீர் வாய்க்கால் சீரமைக்கப்படாததால் மழைநீர் அப்பகுதியில் உள்ள கடைகளுக்குள் புகுந்தது. பலத்த காற்றால் விளம்பர பதாகைகள் சரிந்து விழுந்தது. இதனால் வாகன ஓட்டுனர்கள் அவதி அடைந்தனர். மேலும் மின்சாரமும் தடைபட்டது. இதேபோல குளத்தூர் கடைவீதியில் உள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை பலத்த காற்றால் பறந்து சென்று விழுந்தது. இதனால் அங்கு மழைக்கு ஒதுங்கி இருந்த பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல அன்னவாசல், சித்தன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, இலுப்பூர், குடுமியான்மலை, செங்கிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்தது. இந்நிலையில் நேற்று மதியம் சித்தன்னவாசல் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள பெரிய புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதேபோல காலாடிப்பட்டி சத்திரம் அருகே இருந்த ஒரு மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. மேலும் விளம்பர பதாகைகளும் கீழே விழுந்தன. இந்த பலத்த மழையால் அப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story