அரசு உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் மோசடி செய்த போலி நிருபர் கைது
அரசு உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ.42 ஆயிரம் மோசடி செய்த போலி நிருபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–
நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம். ஈரோடு அகத்தியர் வீதியை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 34), அவருடைய மனைவி கிரிஜா ஆகியோர் எங்கள் வீட்டிற்கு வந்து தாங்கள் பத்திரிகை நிருபர்களாக பணியாற்றி வருவதாகவும், மாவட்ட கலெக்டர், அரசு உயர் அதிகாரிகளிடம் நெருக்கமான பழக்கம் உள்ளதாகவும் கூறினார்கள். மேலும், விலையில்லா வீட்டுமனை பட்டா, அரசு வேலை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை போன்ற அரசு வழங்கும் உதவிகளை பெற்று தருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
வீட்டுமனை பட்டா பெறுவதற்கு ரூ.8 ஆயிரம் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி முன்பணமாக ரூ.3 ஆயிரமும், உதவித்தொகை பெறுவதற்கு ரூ.5 ஆயிரம் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் கூறி முன்பணமாக ரூ.2 ஆயிரமும் எங்களிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். ஆனால் உதவித்தொகை எதுவும் பெற்றுத்தராமல் எங்களிடம் இருந்து பணத்தை பெற்று ஏமாற்றிவிட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார், ஈரோடு டவுன் போலீசாருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், மோகன்ராஜூம், கிரிஜாவும் போலி நிருபர்கள் என்பதும், அவர்கள் பலரிடம் அரசின் உதவித்தொகை பெற்று தருவதாக கூறி ரூ.42 ஆயிரம் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மோகன்ராஜை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவருடைய மனைவி கிரிஜாவை தேடி வருகிறார்கள்.