கலெக்டர் அலுவலகம் அருகே மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்


கலெக்டர் அலுவலகம் அருகே மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
x
தினத்தந்தி 12 May 2018 11:00 PM GMT (Updated: 12 May 2018 8:16 PM GMT)

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே ஆலங் குளத்தில் ஹவுசிங் யூனிட் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 60-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மின்கம்பங்கள் பல சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்து வந்தது. இதுகுறித்து பலமுறை மின்சார வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று இரவு ஆலங்குளம் ஹவுசிங் யூனிட் இ-பிளாக் பகுதியில் இருந்த 2 மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன.

இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இது குறித்து மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story