வினியோகிக்கப்படும் குடிநீரில் இரும்புதாதுவை நீக்க ரூ.20 கோடியில் திட்டம் அமைச்சர் தகவல்


வினியோகிக்கப்படும் குடிநீரில் இரும்புதாதுவை நீக்க ரூ.20 கோடியில் திட்டம் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 13 May 2018 4:30 AM IST (Updated: 13 May 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

கரூர் நகராட்சி பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீரில் உள்ள இரும்பு தாதுவை நீக்க ரூ.20 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர்,

கரூர் நகராட்சியின் 46-வது வார்டுக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை காளியம்மன் கோவில் பகுதி மற்றும் ராயனூர், செல்லாண்டிபாளையம் ஆகிய இடங்களில் பொதுமக்களிடையே கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதற்கான முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். பாராளுமன்ற துணை சபா நாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து குடிநீர் பிரச்சினை, வடிகால் வசதி, தெருவிளக்கு வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை நேரடியாக பெற்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியபோது கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் மக்கள் பிரச்சினைகளை பொதுமக்களிடம் நேரடியாக சென்று கேட்டு அதனை நிவர்த்தி செய்து கொடுக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. அந்த வகையில் கரூர் மாவட்ட நகராட்சி பகுதிக்காக கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு ரூ.68 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவுற்று பாதுகாக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. புதிதாக குடிநீர் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும். மேலும் கரூர் நகராட்சி பகுதியில் வடிகால் வசதி செய்து தருவதற்காக ரூ.13 கோடியே 10 லட்சம் நிதி கேட்டு வலியுறுத்தி வருகிறோம். ரூ.268 கோடியில் 700 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. நகராட்சி பகுதியில் சாலை அமைக்க ரூ.15 கோடி நிதி பெறப்பட்டுள்ளது.

பசுபதிபாளையம் போலீஸ் நிலைய எல்லை பகுதி அதிகளவு இருப்பதால் தாந்தோன்றிமலை பகுதியில் புதிதாக போலீஸ் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் மூலம் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு அலைச்சல், சிரமங்கள் மிச்சமாகும். போலீஸ் துறையினரும் குற்ற சம்பவங்களை தடுக்க துரிதமாக செயல்பட முடியும். கரூர் நகராட்சி பகுதியில் குடிநீர் கலங்கலாக வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது ஆற்றில் நீர் இல்லாமல் வறட்சியான சூழல் உள்ளதால் சுமார் 40 அடிக்கு கீழே ஆழ்துளை கிணற்றிலிருந்து நீர் எடுப்பதால் இரும்புதாதுவும் அதில் சேர்ந்துகொள்கிறது. இதனால்தான் குடிநீரின் நிறம் மாறியதற்கான காரணம். இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. இந்த குடிநீரில் உள்ள இரும்பு தாது சத்தை நீக்க தொழில் நுட்ப வல்லுநர் குழு அமைக்கப்பட்டு ரூ.20 கோடி மதிப்பில் திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியபோது கூறியதாவது:-

தற்போது நடக்கும் இந்த முகாம் மூலம் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை மேற்கொண்டு அவர்களுக்கு பதில் அளிக்கப்படும். பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை ஏற்று கடந்த வாரத்தில் 262 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியத்தொகை பெறுவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. மேலும் 2,000 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதற்காக அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. நகராட்சி வளர்ச்சிக்கு ரூ.75 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. ரூ.60 லட்சத்தில் செல்லாண்டிபாளையம் முதல் திருச்சி புறவழிச் சாலையை இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. செல்லாண்டிபாளையம் முதல் ராயனூர் வரை மக்களின் கோரிக்கையை ஏற்று தார்ச்சாலை அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முகாமின் போது 39 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அப்போது மாவட்ட கலெக்டர் அன்பழகன் பேசுகையில், கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீரின் அளவை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நிலத்திலுள்ள மண்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு பாலித்தீன் பயன்பாடுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அனைவரும் மரம் வளர்த்து அதை பராமரித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றார். நிகழ்ச்சியின் போது 26 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவுகளையும், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு நிதியுதவியும், 9 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, நகராட்சி ஆணையர் அசோக்குமார், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், நகர செயலாளர் நெடுஞ்செழியன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் எஸ்.திருவிகா, பி.மார்க்கண்டேயன் மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் செல்வராஜ், முன்னாள் மாணவரணி செயலாளர் என்.தானேஷ், நகர கூட்டுறவு வங்கி தலைவர் ரேணுகா மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story