மாவட்ட செய்திகள்

சட்டம் வந்தாச்சு... குற்றங்கள் குறையுமா? + "||" + Will the law come on ... crimes will fall?

சட்டம் வந்தாச்சு... குற்றங்கள் குறையுமா?

சட்டம் வந்தாச்சு... குற்றங்கள் குறையுமா?
எத்தனை வசதிகள், வளங்கள் இருந்தாலும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத தேசம், வாழ தகுதியற்ற நாடாகத்தான் கருதப்படும்.
வாய்ப்புகள்-வசதிகள் பெருகி சமுதாயத்தில் வாழ்க்கை தரம் முன்னேற முன்னேற குற்றங்களும் அதிகரிக்கின்றன.

எந்த வசதிகளும் இல்லாத காலத்தில் கட்டுப்பாடுடன் இருந்த மனிதன், நாகரிக வாழ்க்கையின் சுவையை அறிந்த பின்னர் தான் குற்றங்களை செய்ய ஆரம்பித்தான்.


நம் வீட்டில் இருக்கும் தாத்தா-பாட்டிகளிடம் கேட்டால் தெரியும்.. “நாடே ரொம்ப கெட்டுப்போய்விட்டது” என்று அங்கலாய்ப்பாார்கள். “எங்கள் காலத்தில் எல்லாம் இப்படி வெட்டு, குத்து, கொலைகள், பாலியல் வன்முறைகள் நடந்தது கிடையாது. ஏதோ அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும். இப்போது யாருக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது” என்று ஆதங்கப்படுவார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் இந்த வருத்தம் நாட்டு நடப்பை படம்பிடித்து காட்டுவதாக அமைந்து இருக்கிறது.

இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கவலை அளிக்கக்கூடிய வகையில் உயர்ந்து இருக்கிறது.

நம் நாட்டில் 15 நிமிடத்துக்கு ஒரு சிறுமி கற்பழிக்கப்படுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் 500 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக கடந்த 2006-ம் ஆண்டு 18 ஆயிரத்து 967 வழக்குகள் பதிவாயின. 2016-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 958 ஆக அதிகரித்தது. 2015-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை மட்டும் இந்த குற்றங்கள் 14 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.

பாலியல் வன்முறை குற்றங்களில் மூன்றில் ஒரு பங்கு சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் என்ற அதிர்ச்சி தகவலை அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்தியாவில் நடக்கும் பாலியல் பலாத்கார குற்றங்களில் 50 சதவீத குற்றங்கள் தலைநகர் டெல்லி மற்றும் உத்தரபிரதேசம், மராட்டியம், மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் நடைபெறுகிறது.

கடந்த 2016-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் மொத்தம் 38 ஆயிரத்து 947 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் அதிகபட்சமாக மத்தியபிரதேசத்தில் 4,882 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசத்தில் 4,816 வழக்குகளும், மராட்டியத்தில் 4,189 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை பொறுத்தமட்டில் உத்தரபிரதேசம் (14 சதவீதம்), மராட்டியம் மற்றும் மத்திபிரதேசம் (13 சதவீதம்), மேற்கு வங்காளம் (6 சதவீதம்), ஒடிசா (5 சதவீதம்) ஆகிய 5 மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.

2016-ம் ஆண்டில் நாடு முழுவதும் 2,167 கூட்டு பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 682 சம்பவங்கள் நடந்துள்ளன. ராஜஸ்தான் 365 சம்பவங்களுடன் 2-வது இடத்திலும், மத்தியபிரதேசம் 226 சம்பவங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

பாலியல் பலாத்கார குற்றங்கள் பெருகியதற்கு மக்கள் தொகை பெருக்கம் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதுவும் ஒரு காரணம்தான் என்ற போதிலும், மக்கள் தொகை அதிகரிப்பதால் ஏற்படும் குற்றங்களை கல்வி அறிவை மேம்படுத்துவதன் மூலமும், கடுமையான சட்டங்கள்-தண்டனைகள் மூலமும் குறைக்க முடியும்.

ஏனெனில், நம் நாட்டை விட பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் பெரிய நாடு சீனா. இந்தியாவுடன் ஒப்பிடும் போது அங்கு குற்றங்கள், வன்முறைகள், ஊழல்கள் எல்லாமே குறைவாகவே உள்ளன.

அதற்கு காரணம் கடுமையான சட்டங்கள். அங்கெல்லாம் குற்றம் செய்து விட்டு பணத்தாலோ, அதிகார பலத்தாலோ அல்லது சட்டங்களில் உள்ள ஓட்டைகளின் வழியாக புகுந்தோ யாரும் தப்பிக்க முடியாது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் தண்டனை நிச்சயம். அப்படி இருப்பதால் அங்கு சாமானிய மக்களில் இருந்து அதிகாரிகள், ஆட்சியாளர்கள் வரை தவறு செய்ய அஞ்சுகிறார்கள்.

ஆனால் இதற்கு நேர் மாறாக நம் நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. இங்கும் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் பல சட்டங்கள் பல் பிடுங்கப்பட்ட பாம்பாகவும், ஓட்டைகள் நிறைந்தாகவும் உள்ளன.

அதனால் தவறுகள் செய்ய பலர் அஞ்சுவதில்லை. பணபலம், அதிகார பலம் இருந்தால் எந்த குற்றங்களை செய்தாலும் சமுதாயத்தில் பயமின்றி சுதந்திரமாக நடமாடலாம் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது.

எந்த நாட்டில் தண்டனைகள் கடுமையாக இருக்கிறதோ, அங்குதான் குற்றங்கள் குறைவாக இருக்கும் என்பதற்கு சீனா மற்றும் அரபு நாடுகள் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

குறிப்பாக அரபு நாடுகளில் தண்டனைகள் மிகவும் கடுமையாக இருப்பதால்தான் அங்கு குற்றங்கள் மிகவும் குறைவு. அங்கு குற்றவாளிகள் பொது இடங்களில் தண்டிக்கப்படுவதும் ஒரு காரணம் ஆகும். கொலை செய்தாலோ, பாலியல் பலாத்காரம் செய்தாலோ நமக்கும் அதே கதிதான் ஏற்படும் என்ற பயமே பலரை குற்றம் செய்யவிடாமல் தடுக்கிறது. பொது இடத்தில் குற்றவாளி ஒருவனின் தலை துண்டிக்கப்படுவதை பார்க்கும் ஒருவனுக்கு குற்றம் செய்யக்கூடிய துணிச்சல் எங்கிருந்து வரும்? ஆக கடுமையான தண்டனைகள், மற்றவர்களை குற்றம் செய்வதில் இருந்து தடுக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை ஆகும்.

இதில் மனித உரிமை என்ற பிரச்சினையே எழ வாய்ப்பு இல்லை என்றும், குற்றவாளிகளை தண்டிக்காமல் நடமாடவிட்டால், நாட்டில் நல்லவர்களுக்கும், அப்பாவிகளுக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்றும் சமூக நல விரும்பிகள் கூறுகிறார்கள்.

உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பது போல் தப்பு செய்தவன் தண்டனை பெற்றே ஆகவேண்டும் என்றும், தண்டனை வழங்குவதில் காலம் தாழ்த்தக்கூடாது என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ‘போக்சோ சட்டம் (2012)’ ஏற்கனவே அமலில் இருந்தபோதிலும், நாட்டில் ஆண்டுக்கு ஆண்டு பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது சமூக நலனில் அக்கறை கொண்ட அனைவருக்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், மகளிர் அமைப்புகளை சேர்ந்தவர்களும் மத்திய அரசை வற்புறுத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து, குற்றப்பிரிவு சட்டம், சாட்சிய சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் மத்திய அரசு கடந்த மாதம் சில திருத்தங்களை செய்து அவசர சட்டம் பிறப்பித்தது.

இந்த அவசர சட்டத்தின்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கப்படும். கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தால் வாழ்நாள் சிறை தண்டனையோ அல்லது தூக்கு தண்டனையோ விதிக்கப்படும்.

16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் தற்போது வழங்கப்படும் 10 ஆண்டு சிறை தண்டனைக்கு பதில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தால் வாழ்நாள் சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும்.

16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு முன்ஜாமீன் கிடையாது.

மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை களுக்கு எதிரான குறைந்தபட்ச சிறை தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை 2 மாதங்களுக்குள்ளும், மேல்முறையீட்டு மனுக்களை 6 மாதங்களுக்குள்ளும் விசாரித்து முடிக்கவும் இந்த அவசர சட்டம் வகை செய்கிறது.

இந்த அவசர சட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக நாடாளுமன்றத்தில் 6 மாதங்களுக்குள் மசோதா கொண்டு வரப்பட்டு நிரந்தர சட்டம் நிறைவேற்றப்படும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக நடந்த குற்றத்தின் வீரியம் காலப்போக்கில் படிப்படியாக நீர்த்துப்போவதுடன், குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஒருவித அனுதாப போக்கும் உருவாக்கப்படுகிறது. சாதி, மதம், இனம், அரசியல் ரீதியாக குற்றவாளிகளுக்கு ஆதரவான குரல்களும் எழத்தொடங்குகின்றன.

இது ஆரோக்கியமான போக்கு அல்ல என்றும், அப்படி குரல் கொடுப்பவர்கள், அந்த நபரால் சீரழிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தை பற்றியும், அவர்கள் அனுபவிக்கும் வேதனை பற்றியும் சிந்தித்து பார்ப்பது இல்லை என்பதும் சமூக நலனில் அக்கறை கொண்ட பலரும் கூறுகிறார்கள்.

எனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய சட்டத்தின் மூலம், நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுமிகள் பாதிக்கப்படுவது அதிகரிப்பு

பாலியல் பலாத்காரங்களில் சிக்கும் சிறுமிகளின் எண்ணிக்கை பொதுவாக ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் கடந்த 2004-ம் ஆண்டு பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளில் 19.9 சதவீதம் சிறுமிகள் சம்பந்தப்பட்டவை ஆகும்.

2005-ல் இது 22.2 சதவீதமாகவும், 2006-ல் 25.6 சதவீதமாகவும் அதிகரித்தது. 2007-ல் 24.7 சதவீதமகவும் 2008-ல் 25.4 சதவீதமாகவும், 2009-ல் 25.1 சதவீதமாகவும், 2010-ல் 25 சதவீதமாகவும், 2011-ல் 29.8 சதவீதமாகவும், 2012-ல் 36.5 சதவீதமாகவும், 2013-ல் 39.4 சதவீதமாகவும், 2014-ல் 38.6 சதவீதமாகவும், 2015-ல் 32.8 சதவீதமாகவும், 2016-ல் 43.2 சதவீதமாகவும் இருந்தது.

சில ஆண்டுகளில் மட்டும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகள் குறைந்த போதிலும், மொத்தத்தில் அதிகரித்தே வருகிறது.

2016-ம் ஆண்டு நிலவரப்படி, நாடு முழுவதும் 1 லட்சத்து 52 ஆயிரத்து 165 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இதில் 18 ஆயிரத்து 552 வழக்குகளில் விசாரணை முடிந்து 4,739 பேர் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதாவது, 25.5 சதவீதம் பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டு உள்ளனர். 13 ஆயிரத்து 813 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

அதே 2016-ம் ஆண்டு நிலவரப்படி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இந்தியா முழுவதும் 2 லட்சத்து 27 ஆயிரத்து 739 வழக்குகள் இருந்தன. இதில் 22 ஆயிரத்து 763 வழக்குகளில் விசாரணை முடிந்து 6,991 வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்கள். அதாவது 30.7 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு உள்ளனர். 15 ஆயிரத்து 772 வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கொல்லப்படும் ஆபத்து

நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதை போல், எல்லா பிரச்சினைகளுக்கும் இரு பக்கங்கள் உள்ளன.

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு பலத்த வரவேற்பு இருப்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம் குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள் சிலரும், பெற்றோர்களில் ஒரு தரப்பினரும் இந்த அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தங்கள் எதிர்ப்புக்கு அவர்கள் சில நியாயமான காரணங்களை முன்வைக்கிறார்கள்.

இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பெற்றோர்களில் சிலர், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிப்பதற்கு பதிலாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் அந்த துயரத்தில் இருந்து மீண்டு எழுந்து எதிர்கால வாழ்க்கை போராட்டத்தை சமாளிக்கும் வகையில் சட்டத்தை பலப்படுத்த வேண்டும் என்றனர்.

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் அமலுக்கு வந்தால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தன்னை காட்டிக் கொடுத்துவிடுவாள் என்ற அச்சத்தில், குற்றவாளி அந்த சிறுமியை கொன்று விடும் ஆபத்து உள்ளது என்று கருத்தரங்கில் பேசிய ஒரு பெண் தெரிவித்தார்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு சிறுமியின் தந்தை வேதனையுடன் சில கருத்துகளை தெரிவித்தார். டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற சில நாட்களில் தனது 3½ வயது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அது குறித்து புகார் கொடுக்க போலீஸ் நிலையத்துக்கு சென்ற போது அங்கு போலீசார், தனது மகளிடம் நடந்த சம்பவம் பற்றி துருவித்துருவி கேட்டதும், அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவள் திணறியதும் தனக்கு மிகவும் கசப்பான அனுபவமாக அமைந்ததாக அவர் வருத்தத்துடன் கூறினார்.

இன்னொரு பெண் பேசுகையில், தனது மகளை தனது கணவரே பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கண்ணீர் மல்க கூறினார். என் கணவரை போன்ற குற்றவாளிகளை தூக்கில் போட்டுவிட்டால், அவர்கள் தங்கள் பொறுப்பில் இருந்து தப்பியவர்கள் ஆகிவிடுவார்கள் என்றும், மேலும் அவர்களுடைய குடும்பமும் வருமானம் இன்றி ஆனாதையாகிவிடும் என்றும் தெரிவித்தார்.

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மையத்தின் தலைவர் அனுஜா குப்தா பேசுகையில், பாலியல் வன்முறை தொடர்பான 94 சதவீத வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்றும், எனவே குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என்ற நிலை வந்தால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தரப்பில் போலீசில் புகார் செய்வது குறைந்துவிடும் என்றும் கூறினார்.

கொட்டிக்கிடக்கும் ஆபாசம்

நல்ல பழக்க வழக்கங்கள், செயல்கள் கசப்பு மருந்தை போன்றவை. கசப்பு மருந்தை யாரும் விரும்புவதில்லை; ஆனால் உடலுக்கு நல்லது. உண்மையே பேசவேண்டும் என்று உறுதி எடுத்து அதன்படி நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து காட்டுவது சிரமம்.

கெட்ட விஷயங்கள்-பழக்கங்கள் இனிப்பு மருந்தை போன்றவை. அவை எளிதில் நம்மை ஒட்டிக்கொள்ளும்.

சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரித்ததற்கு சமூக ஊடகங்களின் தாக்கமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக ஸ்மார்ட் போன்களின் வருகை இதில் முக்கிய பங்கு வகிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

இந்த போன்கள் இல்லாத இளையசமுதாயத்தை இப்போது பார்க்க முடியாது. பஸ், ரெயில் பயணங்கள், பூங்கா போன்ற பொது இடங்கள் என எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் தலைகுனிந்தபடி செல்போனில் எதையோ பார்த்துக்கொண்டு-தேடிக்கொண்டு இருப்பதை காணலாம். எங்கிருந்தபடியும் உள்ளங்கையில் இருக்கும் செல்போன் மூலம் உலக நடப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது. தகவல் தொழில்நுட்ப புரட்சியால் கிடைத்த வரப்பிரசாதம் இது.

அறிவுக்களஞ்சியமான இணையதளங்களில் எண்ணிலடங்கா தகவல்கள், படங்கள், வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு. ஆனால் பலர் பாலுணர்வை தூண்டும் ஆபாச தளங்களுக்கு சென்று பொழுதை கழிக்கிறார்கள். பாலுணர்வை தூண்டும் ஹார்மோன்கள் செய்யும் சேட்டையால் சிறுவர்கள், விடலைப்பருவ பையன்கள், இளைஞர்கள் பலர் அதில் சிக்கிக்கொள்கிறார்கள். இதனால் தூண்டப்படும் சிலர் பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். குழந்தைகள், சிறுமிகள் என்றுகூட அந்த கயவர்கள் பார்ப்பது இல்லை.

சுமார் 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பாலியல் தொடர்பான விஷயங்களை பேசுவது, படிப்பது, படங்களை பார்ப்பது ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அன்று குதிரை கொம்பாக இருந்த விஷயம் இப்போது தண்ணீர்பட்ட பாடாகிவிட்டது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் கைங்கர்யத்தால் ஆபாசங்கள் இப்போது கைக்குள் வந்து, வயது வித்தியாசம் இன்றி எளிதாகிவிட்டது. யாருக்கும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் போய்விட்டது. மனக்கட்டுப்பாடு உள்ளவர்கள் அந்த பக்கமே போவதில்லை. ஆனால் மற்றவர்கள் அதிலேயே லயித்து விடுகிறார்கள். சிறுவர்கள் கூட ஆபாச படங்களை பார்த்து பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டு மற்றவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதோடு, தங்கள் எதிர்காலத்தையும் தொலைத்துவிடுகிறார்கள்.

பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டதால் சிறுவர்கள் கைது செய்யப்பட்டதாக சமீப காலங்களில் அடிக்கடி வெளியாகும் செய்திகள் சமூக நலனில் அக்கறை கொண்டவர்களுக்கு அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

பிஞ்சிலே பழுத்தால் காய் மட்டுமல்ல, வாழ்க்கையும் சுவைக்காது.

பாலியல் குற்றசெயல்களில் ஈடுபடாமல் அவர்களை தடுத்து நிறுத்தி, நல்வழிப்படுத்துவதில் சட்டத்துக்கு மட்டுமின்றி பெற்றோர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினருக்குமே பொறுப்பு உள்ளது.

பெற்றோரின் பொறுப்பு

‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

ஆனால், நாட்டில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை பார்த்தால், இந்த சமுதாயம் எங்கே போகிறது? என்ற கேள்வி எழுகிறது. பெண் குழந்தைகளை பெற்றோர்கள் மிகவும் கண்ணும், கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

* அறிமுகம் இல்லாதவர்கள் குழந்தைகளை கொஞ்சவோ, பேசவோ அனுமதிக்கக்கூடாது.

* உறவினர்கள், தெரிந்தவர்கள் என்றாலும் யாரையும் முழுமையாக நம்பி அவர்களிடம் குழந்தைகளை ஒப்படைக்கக்கூடாது.

* பிற ஆண்களுடன் குழந்தை பேசும் போதும், பழகும் போது பெற்றோர் கவனத்துடன் இருக்கவேண்டும்.

* நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.

* தெரிந்தவர்கள், அறிமுகம் இல்லாதவர்கள் யாராவது தனியாக அழைத்தால் அவர்களுடன் செல்லக்கூடாது என்று சொல்லி வைக்க வேண்டும்.

* யாராவது தேவை இல்லாமல், தவறான நோக்கத்தில் பேசினாலோ, தொட்டாலோ அதுபற்றி எந்த தயக்கமும் இன்றி கூறுமாறு சொல்லி வைக்க வேண்டும்.

* விழாக்கள், விருந்து நிகழ்ச்சிகள், பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

* எல்லாவற்றுக்கும் மேலாக, பெண் குழந்தைகளை மட்டுமின்றி, ஆண் குழந்தைகளையும் ஒழுக்கம், கட்டுப்பாடு, பிறரை மதித்தல் போன்ற நல்ல பழக்க வழங்கங்களை சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். பையன் எங்கே போகிறான்? யார்-யாருடன் பழகுகிறான்? என்ன மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்துகிறான்? என்பதை கண்காணிக்க தவறக்கூடாது.

இன்றைய செடிதான் வளர்ந்து நாளை மரமாகி சுவையான கனியை தரவேண்டும். எனவே, குழந்தை பருவத்திலேயே பிள்ளைகளை பக்குவப்படுத்தி நல்லவர்களாக வளர்ப்பது பெற்றோரின் கடமை ஆகும். 

தொடர்புடைய செய்திகள்

1. முந்தைய மத்திய அரசுகள் பெண்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை; பிரதமர் மோடி
முந்தைய மத்திய அரசுகள் பெண்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
2. நூற்பாலைகளில் பணியாற்றும் பெண்கள் தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட வேண்டும் பயிற்சி முகாமில் விழிப்புணர்வு
நூற்பாலைகளில் பணியாற்றும் பெண்கள் தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
3. மகாராஷ்டிராவில் வேன் மீது லாரி மோதல்; 7 பெண்கள் உள்பட 10 பேர் பலி
மகாராஷ்டிராவில் வேன் மீது லாரி மோதியதில் 7 பெண்கள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.
4. இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
இலவச வீட்டுமனை வழங்கக்கோரி அயன்பேரையூர் கிராம பெண்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
5. புதுக்கோட்டையில் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த பெண்கள் நீண்ட நேரம் காத்திருப்பு
புதுக்கோட்டையில் கலெக்டர் கணேஷிடம் மனு கொடுக்க வந்த பெண்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நீண்டநேரம் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.