நிதிநிறுவனம் நடத்தி மோசடி 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது


நிதிநிறுவனம் நடத்தி மோசடி 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
x
தினத்தந்தி 14 May 2018 3:15 AM IST (Updated: 14 May 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்து 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை,

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மகேந்திர ஜெயின்(வயது 40). இவர் கடந்த 2015–ல் மதுரையில் வீட்டு உபயோக பொருள்களை மாதாந்திர தவணை முறையில் விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கி விருதுநகர், ராஜபாளையம் பகுதிகளில் விற்பனை செய்து வந்தார். அதில் பொதுமக்களிடையே ஏற்பட்ட அறிமுகத்தை பயன்படுத்தி, நண்பர்களுடன் சேர்ந்து நிதி நிறுவனத்தை தொடங்கினார். நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகமாக பணம் தருவதாக கூறியதை தொடர்ந்து ஏராளமானோர் பணம் முதலீடு செய்தனர்.

இந்தநிலையில் ரூ.1 கோடியே 50 லட்சம் வசூலான நிலையில் பொதுமக்களுக்கு பணம் கொடுப்பதில் இழுபறி ஏற்பட்டது. இதையடுத்து வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை திருப்பித்தருமாறு கேட்ட போது நிதி நிறுவனம் மூடப்பட்டது. நிறுவனத்தை நடத்திய மகேந்திர ஜெயின் உள்பட 6 பேர் தலைமறைவாகினர்.

இதுதொடர்பாக நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் அளித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, நிறுவனத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரனையில் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த பணத்தை மகேந்திர ஜெயின் மோசடி செய்தததாக தெரிவித்தனர்.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், மகேந்திர ஜெயினை தேடி வந்தனர். ஆனால் மகேந்திர ஜெயின் தொடர்ந்து 3 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்தநிலையில் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு மகேந்திர ஜெயின் வந்திருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம் தலைமையிலான போலீசார் அங்கு சென்று மகேந்திர ஜெயினை கைது செய்தனர்.


Next Story