இருக்கன்குடி கோவிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து: வேன் கவிழ்ந்து 6 பேர் பலி


இருக்கன்குடி கோவிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து: வேன் கவிழ்ந்து 6 பேர் பலி
x
தினத்தந்தி 13 May 2018 10:30 PM GMT (Updated: 13 May 2018 7:02 PM GMT)

இருக்கன்குடி கோவிலுக்கு சென்று திரும்பியபோது வேன் கவிழ்ந்ததில்4 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் காயம் அடைந்தார்கள்.

சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மாதாங்கோவில் பட்டியை சேர்ந்தவர் கெங்கையா. முன்னாள் ராணுவ வீரரான இவர் இருக்கன்குடி மாரியம்மன்கோவிலில் அக்னி சட்டி எடுத்து முடி காணிக்கை செலுத்துவதாக நேர்ந்து இருந்தார். நேர்த்திக்கடனை செலுத்த நேற்று உறவினர்களுடன் ஒரு வேனில் சென்றனர். அதனை பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணன்(வயது33) என்பவர் ஓட்டிச்சென்றார்.

காலையில் அக்னிசட்டி எடுத்தும் முடி காணிக்கை செலுத்தியும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வேனில் ஊருக்கு புறப்பட்டனர். கெங்கையா உள்ளிட்ட சிலர் ஆட்டோவில் திரும்பினர். உறவினர்கள் 23 பேர் வேனில் வந்தார்கள்.

பிற்பகல் 2 மணி அளவில் சாத்தூர் அருகே ராமச்சந்திராபுரம் என்ற இடத்தில் ஒரு வளைவில் வேன் திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக வேனின் முன்சக்கரம் கழன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் வேன் கவிழ்ந்தது. விபத்தில் சிக்கிய வேன் செங்குத்தாக நின்றது. வேன் கவிழ்ந்ததும் அதை ஓட்டி வந்த கண்ணன் அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டார்.

வேனில்வந்த அனைவரும் காயம் அடைந்தார்கள். அவர்களில் பேச்சியம்மாள்(50), குருவம்மாள்(65), அமுதா(45), போத்தையா(65), மணிகண்டன்(34) ஆகிய 5 பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்து போனார்கள். குருலட்சுமி(18) என்பவர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் இழந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 6 ஆனது.

பலத்த காயம் அடைந்த சத்யா(45), ராஜம்மாள்(55) ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கங்காதேவி(45), அய்யம்மாள்(50) ஆகியோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மேலும் கிருஷ்ணசாமி(56), காளியம்மாள்(33), சுகுமார்(55), அபிஷேக்(11), பானுமதி(38), கங்காகாவியா(16), சித்திரைகண்ணன்(6),முத்துலட்சுமி(24), பொம்மாயி(65), சுப்புத்தாய்(55), வள்ளிநாயகம்(32), முருகலட்சுமி(9), மாரியம்மாள்(51) ஆகிய 13 பேர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சாத்தூர் நகர போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ராமச்சந்திராபுரம் கிமாரத்தினரும் மீட்பு பணியில் இறங்கினர். காயம் அடைந்தோர் 8 ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

– பாகஸ் மேட்டர் ஒரே குடும்பத்தில் 3 பேர் சாவு இந்த விபத்தில் இறந்த குருவம்மாளின் சொந்த ஊர் மாதாங்கோவில் பட்டி என்றாலும் அவரது மகன் மாரிமுத்துவின் குடும்பத்தோடு நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் வசித்து வந்தார். உறவினரான கெங்கையா அழைப்பின் பேரில் மருமகள் அமுதா, பேத்தி குருலட்சுமி, பேரன் சித்திரைகண்ணன் ஆகியோருடன் கோவிலுக்கு வந்துள்ளார். விபத்தில் குருவம்மாள், அமுதா, குருலட்சுமி ஆகியோர் இறந்து போனார்கள். சித்திரைகண்ணன் சாத்தூர் அரசு மருத்துவமனையில் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story