கோடை விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்


கோடை விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 13 May 2018 10:00 PM GMT (Updated: 13 May 2018 7:43 PM GMT)

கோடை விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அங்குள்ள பல்லவர் கால பாரம்பரிய சிற்பங்களை கண்டுகளித்து மகிழ்ச்சியடைகின்றனர்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

எந்தவித தொழில்நுட்ப வசதியும் இல்லாத, 7–ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் தங்கள் கலைத்திறனை நிரூபிக்கும் வகையில் குடைவரை மண்டபங்களையும், குடைவரை கோவில்களையும் எழுப்பினார்கள்.

அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு சிற்பங்கள் உலகளவில் பல்லவர்களின் கலைத்திறனை கொண்டு சென்றுள்ளன. சைவ, வைணவ மதத்தை பின்பற்றி பல்லவர்கள் இங்குள்ள சிற்பங்களை வடிவமைத்துள்ளனர். ஒவ்வொரு குடைவரை கோவில்களும், சிற்பங்களும் மகாபாரத, ராமாயண கதைகளை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளன.

கடற்கரை கோவில், ஐந்துரதம் ஆகியவை உலக பாரம்பரிய சின்ன பட்டியலில் உள்ள கோவிலாகும். இந்த 2 இடங்களையும் கண்டுகளிக்க மத்திய தொல்லியல் துறை உள்நாட்டு பயணிக்கு ரூ.30, வெளிநாட்டு பயணிக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கிறது.

அதேபோல் அர்ச்சுனன் தபசு, கிருஷ்ண மண்டபம், திருமூர்த்தி மண்டபம், மகிஷாசூரமர்த்தினி மண்டபம், வெண்ணெய் உருண்டை கல் போன்றவற்றை கண்டுகளிக்க கட்டணம் கிடையாது.

ஆபத்து ஒரு பக்கம் இருந்தாலும், அர்ச்சுணன் தபசு பாறை சிற்பத்தின் மலைக்குன்றின் மீது ஏறி இளைஞர்கள் சிலர் ஆர்வ மிகுதியால் செல்பி எடுத்து மகிழ்வதை நாம் கண் கூடாக காணலாம்.

மேலும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கத்தின் உச்சியின் மீது ஏறி பார்த்தால் மாமல்லபுரம் நகரின் அழகையும், கடற்கரையும் கண்டுகளிக்கலாம்.

இந்த கலங்கரை விளக்கத்தின் அருகில் சிற்ப நுணுக்கங்களுடன் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழைய கலங்ரை விளக்கமும் சுற்றுலா பயணிகளை ரசிக்க தூண்டும்.

மாமல்லபுரம் மலைக்குன்றின் மீது அமைந்துள்ள இந்த 2 கலங்கரை விளக்கமும் இயற்கை எழில் கொஞ்சும், பசுமை காட்சிகளை சுற்றுலா பயணிகளுக்கு படம் பிடித்து காட்டுகின்றன.

பழைய கலங்கரை விளக்கம் மீது ஏற கட்டணம் கிடையாது. துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறையின் கீழ் இயங்கும் புதிய கலங்கரை விளக்கத்தின் மீது ஏறி நகரின் அழமை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகளுக்கு ரூ.10, சிறுவர்களுக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இங்கு உலகப்புகழ் பெற்ற கடற்கரை கோவிலுடன் ஒட்டி கடற்கரை பகுதி அமைந்துள்ளதால் இக்கடற்கரை பகுதியை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து செல்வதில் தவறுவது கிடையாது. குடும்பத்துடன் வருபவர்கள் அஙகு குளித்தும் மகிழ்கின்றனர்.

மாமல்லபுரத்திற்கு கோடை விடுமுறைக்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து மாநகர சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

மேலும் கடற்கரை கோவில் மற்றும் ஐந்துரதம் பகுதியில் சரியான குடிநீர் வசதி இல்லாமலும், சுற்றிப்பார்த்த பிறகு நிழலில் அமர்ந்து இளைப்பாற நிழற்குடை வசதி இல்லாமலும் சுற்றுலா பயணிகள் அவதியுற்று வருகின்றனர்.


Next Story